ஏப்ரல் 1 முதல் பிளாஸ்டிக் 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகள்! ஏற்கனவே இருக்கும் காகித நோட்டுகள் செல்லுமா?
இந்திய ரிசர்வ் வங்கி வருகின்ற 2027-ஆம் ஆண்டின் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை பிளாஸ்டிக்கை கொண்டு வெளியிட திட்டமிட்டுள்ளது. சோதனை முயற்சியாக சில இடங்களில் மட்டும் இந்த நோட்டுகள் வெளியாகிறது. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள நோட்டுகளின் அளவில் தான் இவை அச்சிடப்பட இருக்கிறது.
வங்கிகளுக்கு செலவு மிச்சம்: தற்போது வரை புழக்கத்தில் இருக்கும் 10 மற்றும் 20 ரூபாய் காகித நோட்டுகளின் அளவுகளில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் வரவிருப்பதால் ஏடிஎம்களில் மறு சீரமைப்பு நடவடிக்கை எதுவும் எடுக்கத் தேவையில்லை. வங்கிகளுக்கும் செலவு மிச்சம். புதிய நோட்டுகளின் அளவு மாற்றப்பட்டால் ஏடிஎம் எந்திரங்களையும் அதற்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

பாலிமர் நோட்டின் சிறப்பம்சம் என்ன?: உங்களுக்கே தெரியும் காகித நோட்டுகள் அவ்வப்போது சேதமடையும் வாய்ப்பு உள்ளது. ஆனால் பாலிமர் நோட்டுகளாக இருந்தால் எப்படி நாணயங்கள் இருக்கிறதோ அதைப்போலவே நீண்ட நாட்களுக்கு சேதம் அடையாமல் இருக்கும். இது குறித்து பேசிய இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா, “சில நாடுகள் பாலிமர் நோட்டுகளை சுமார் 30 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றன. குறைந்த மதிப்புடைய நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கும். எனவே அதற்கு மாற்றாக பிளாஸ்டிக்கை கொண்டு செய்யப்படும் நோட்டு புழக்கத்துக்கு வந்தால் சேதமடையாமல் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ரூ.200 கோடிக்கு பாலிமர் நோட்டுகள்: முதற்கட்டமாக 100 கோடி ரூ.10 பாலிமர் நோட்டுகளையும், 100 கோடி 20 ரூபாய் பாலிமர் நோட்டுகளையும் அச்சிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இந்த நோட்டுகளின் தரம் எப்படி இருக்கிறது?, அதை மக்கள் எப்படி பயன்படுத்துகின்றனர்? என்பதை எல்லாம் சோதித்த பிறகே அடுத்தடுத்த நோட்டுகளும் பாலிமர் நோட்டாக மாற்றப்படும்.
மேலும் இந்த நோட்டுகள் சோதனை முயற்சிக்காக மட்டுமே அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. உடனடியாக காகித நோட்டுக்கு மாற்றாக இதை கொண்டு வரவில்லை. பாலிமர் நோட்டுகள் வெளியிடப்பட்டாலும் காகித நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே மக்கள் தங்களிடம் இருக்கும் நோட்டுகளை நினைத்து பயப்படத் தேவையில்லை. அதையும் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
1,000 ரூபாய் நோட்டு வெளியாகிறதா?: தற்போது வரையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பாலிமர் நோட்டாக மாற்றுவது குறித்த எந்த ஒரு திட்டமும் ரிசர்வ் வங்கியிடம் இல்லை. ஆனால் சமீப காலமாக சமூக வலைதளங்களில் இது போன்ற செய்தி பரவி வருகிறது. இது குறித்து அரசு செய்தி நிறுவனமான பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ.. “புதிய 1000 ரூபாய் பாலிமர் நோட்டு வெளியிடப்பட இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இது முற்றிலும் போலியானது. புதிய 1000 ரூபாய் நோட்டு வெளியாவது குறித்து ரிசர்வ் வங்கியின் தரப்பில் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை” என்று உறுதிப்படுத்தியுள்ளது.
ரூபாய் நோட்டுகள் குறித்து எந்த ஒரு செய்தி பரவினாலும் அதன் உண்மை தன்மையை அதிகாரப்பூர்வ செய்தி சேனல்கள் வாயிலாக தெரிந்து கொள்ளுங்கள். மேலும் ஆர்பிஐ தரப்பிலும் அறிவிப்பு வெளியாகும்.
