Last Updated:
ஒன்பிளஸ் நிறுவனம் ஐரோப்பிய சந்தைகளில் தனது இருப்பை சற்று குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது
ஸ்மார்ட்போன் பொருளாதாரத்தில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்த ஒன்பிளஸ் நிறுவனம், இந்திய சந்தையை விட்டு வெளியேறப்போவதாக வந்த தகவல் பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறைந்த விலையில் ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களுக்கு இணையான ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்து வெற்றி பெற்ற நிறுவனம் ஒன்பிளஸ். இருப்பினும், இந்தாண்டு தொடக்கம் முதலே இந்நிறுவனம் தனது உலகளாவிய செயல்பாடுகளைக் குறைத்து வருவதாகச் செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ராபின் லியு எதிர்வரும் மார்ச் 31ம் தேதியில் இருந்து தனது பதவியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்தார். இந்தத் திடீர் ராஜினாமா அறிவிப்பு ஒன்பிளஸ் பிரியர்களிடம் பலத்த தயக்கத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கூகுள் டிரெண்ட்ஸில் ஒன்பிளஸ் மூடுவிழா’ (OnePlus Shutdown) தொடர்பான தேடல்கள் அதிகரித்துள்ளன.
இருப்பினும், சமகாலத்திற்கு ஏற்ப வணிகத்தை அணுகுவது, புதிய சந்தைகளை மதிப்பாய்வு செய்வது, நீண்டகால இலக்குகளுடன் உத்திகளை ஒருங்கிணைப்பது போன்ற நோக்கங்களுடன் நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும் அதன் தொடர்ச்சியாகவே ராஜினாமா செய்தியை பார்க்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில ஊடக அறிக்கையின் படி, ஒன்பிளஸ் நிறுவனம் ஐரோப்பிய சந்தைகளில் தனது இருப்பை சற்று குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்தியச் சந்தையில் நடுத்தர விலை கொண்ட (Mid-range) ஸ்மார்ட்போன்களில் அதிக கவனம் செலுத்தி தனது இருப்பைத் தக்கவைக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


