இந்த நிலையில் மத்திய அரசு ஏசி-யில் குறைந்தபட்ச வெப்பநிலையை செட் செய்வது தொடர்பாக ஒரு புதிய விதியை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இது பயனர்கள் தங்கள் ஏர் கண்டிஷனர் டெம்பரேச்சரை எவ்வளவு குறைவாக வைத்து குறிப்பிட்ட இடத்தை குளிர்விக்க முடியும் என்பதை கட்டுப்படுத்தக்கூடிய விதி என்பதுதான் முக்கியமானது.
ஆம், அரசு திட்டமிட்டு வரும் இந்த விதி நடைமுறைக்கு வந்தால், கடுமையான வெப்பத்தின்போதும் கூட உங்கள் ஏசியை 20 டிகிரி செல்சியஸுக்குக் கீழே செட் செய்ய முடியாது. அரசை இந்த முடிவை எடுக்க தூண்டிய காரணம் என்ன? மத்திய மின்சார அமைச்சர் மனோகர் லால் கட்டார் இது குறித்து பேசுகையில், மின்சாரத்தை சேமிக்கவும், இந்தியாவின் அதிகரித்து வரும் எரிசக்தித் தேவையை நிர்வகிக்கவும் மேற்கொள்ளப்படும் ஒரு பெரிய முயற்சியின் ஒரு பகுதிதான் ஏசி டெம்ப்ரேச்சர் குறித்த இந்த முடிவு என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய ஏசி செட்டிங் வீட்டில் பயன்படுத்தப்படும் ஏர் கண்டிஷனர்களுக்கு மட்டுமல்ல, ஹோட்டல்கள் மற்றும் கார்களில் உள்ள ஏசி-க்கும் பொருந்தும். ஏர் கண்டிஷனிங் தரநிலைகள் குறித்து, புதிய விதிமுறை விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. ஏசி-களுக்கான வெப்பநிலை தரநிலையானது 20°C முதல் 28°C வரை மட்டுமே செட் செய்யப்படும். அதாவது, ஏசி-யில் வெப்பநிலையை 20°C-க்கு கீழே குளிர்விப்பதற்காக அல்லது 28°C-க்கு மேலே செட் செய்ய முடியாது. “வெப்பநிலை அமைப்புகளை தரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முதல் வகையான பரிசோதனை இது,” என்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கட்டார் கூறினார்.
மத்திய அரசு ஏன் இதைச் செய்ய விரும்புகிறது?
இந்த நடவடிக்கை எடுக்க முக்கிய காரணமாக, குறிப்பாக கோடை மாதங்களில் மின்சாரத் தேவை உச்சத்தில் இருக்கும்போது பயன்படுத்தப்படும் மின்சார அளவைக் குறைப்பது என்று கூறப்படுகிறது. கோடை வெயில் தகிக்கும்போது ஏசி பயன்படுத்தும் பெரும்பாலான வீடுகள் மற்றும் கட்டிடங்களில் ஏசி-க்கள் மிகக் குறைந்த வெப்பநிலையில் இயக்குகின்றன. சில நேரங்களில் 16°C வரையிலான மிகக் குறைந்த வெப்பநிலையில் நீண்ட நேரம் இயங்குகின்றன. இது மின் கட்டமைப்பில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
ஏர் கண்டிஷனர்கள் சுமார் 50 ஜிகாவாட் மின்சாரப் பயன்பாட்டைக் கொண்டுள்ளன. இது நாட்டின் அதிகபட்ச மின் சுமையில் ஐந்தில் ஒரு பங்கு. ஏசி வெப்பநிலையில் ஒவ்வொரு 1°C அதிகரிப்பும் ஆற்றல் பயன்பாட்டை 6% வரை குறைப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. அதாவது, அனைவரும் தங்கள் ஏசி-க்களை 1 டிகிரி அதிகமாக செட் செய்தால், உச்ச நேரங்களில் சுமார் 3 ஜிகாவாட் மின்சாரத்தை சேமிக்க முடியும் என்று மின்சார வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் உயர் அதிகாரியான பங்கஜ் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் சுமார் 100 மில்லியன் ஏசிகள் உள்ளன. மேலும், ஆண்டுதோறும் 15 மில்லியன் ஏசி-க்கள் புதிதாக நிறுவப்பட்டு வருகின்றன. எனவே, ஏசி டெம்ப்ரேச்சரில் செய்யப்படும் சிறிய விதிமுறைத் திருத்தம்கூட பெரிய சேமிப்பிற்கு வழிவகுக்கும். கோடை காலங்களில் இந்தியா எதிர்கொள்ளும் முக்கியச் சவால்களில் ஒன்று, வெப்ப அலைகளின் காரணமாக அதிக மின்சாரத் தேவை நிலவும் சூழலில் ஏற்படும் மின்சாரத் தடை.
உண்மையில், நாட்டின் மின்சாரப் பயன்பாடு கடந்த கோடையில் 250 ஜிகாவாட்டாக உயர்ந்தது. மேலும் இந்த ஆண்டு அது 270 ஜிகாவாட்டாக உயரக்கூடும். இதுவரை, மே மாதத்தில் பெய்த கனமழையால் தேவை குறைந்துள்ளது. ஆனால், ஜூன் மாதத்தில் வெப்ப அலைகள் திரும்பி இருப்பதால் மின்சாரப் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது. ஏசி வெப்பநிலையை தரப்படுத்துவது இதுபோன்ற நேரங்களில் மின்சாரப் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைப்பதோடு, மின் தடை ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கும்.
ஏசி-க்களுக்கான எரிசக்தி சேமிப்பு விதிகளுடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை மேம்படுத்தவும் அரசு செயல்பட்டு வருகிறது. மொத்தம் 30 ஜிகாவாட்-மணிநேரத் திறன் கொண்ட பேட்டரி சேமிப்பு அமைப்புகளை உருவாக்க நிறுவனங்களை மத்திய அரசு அழைக்க உள்ளதாக அமைச்சர் கட்டார் கூறியுள்ளார்.
June 14, 2025 10:17 PM IST
ஏசி வெப்பநிலையை 20°C-க்குக் கீழே குறைக்க முடியாது…! அரசு கொண்டுவர நினைக்கும் புதிய விதியின் நோக்கம் என்ன…?

