இரவு பகல் பாராமல் அயராது ஓடி உழைக்கும் அனைவரது ஆசையும் நிம்மதியான ஓய்வு தான். அடிக்கிற வெயிலுக்கு அப்படிப்பட்ட உறக்கம் பலருக்கும் கிடைப்பதல்ல. தூக்கத்தின் அருமையைக் குறிக்க காசைக் கொடுத்து மெத்தையை வாங்கலாம் ஆனால் தூக்கத்தை வாங்க முடியாது எனக் கூறுவார்கள்.
ஆனால் நம் தாத்தா பாட்டியோ எவ்வளவு உழைத்துக் களைத்துப் போயிருந்தாலும் படுத்த உடன் தூக்கம் தரக்கூடிய ஒரு சூட்சமத்தை வைத்திருந்தனர். கால ஓட்டத்தில் நவீன மயமாதலால் நாம் அந்த பாரம்பரியத்தைக் கைவிட்டு விட்டோம். அது தான் கயிற்றுக் கட்டில். நம் முன்னோர்கள் பனை நார், கயிறு கொண்டு பின்னப்பட்ட கட்டிகளையே உறங்குவதற்குப் பயன்படுத்தினர்.
நல்ல காற்றோட்டம் கொண்டதாக இருக்கும் இந்த கட்டிலில் படுத்த கொஞ்ச நேரத்தில் நம்மை மறந்து நாம் தூங்கி விடுவோம். பாரம்பரியத்தின் அருமை கருதி தற்போது பல விஷயங்கள் மீட்டுருவாக்கம் செய்யப்படுவது போல இந்த கயிற்றுக் கட்டிலும் காலத்திற்கு ஏற்ப கண்ணைக் கவரும் வகையில் மீண்டு வந்துள்ளது.
இதையும் படிங்க: பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம்… தொழில் முனைவோராக இது சூப்பர் சான்ஸ்…
அப்படி வகைவகையாய் மெத்தை பயன்படுத்திய மக்களை மீண்டும் பாரம்பரியக் கயிற்றுக் கட்டில் பக்கம் இழுத்து இருக்கிறது சேலம் மாவட்டம். இங்கு சங்ககிரி வட்டம், மூலக்கடை கிராமப்பகுதியில் வகைவகையாய் கயிற்றுக் கட்டில் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த கயிற்றுக் கட்டில் தயாரிப்பில் தலைமுறை தலைமுறையாக ஈடுபட்டு வரும் இவர்கள், குறைந்து வரும் கயிற்றுக் கட்டில் உபயோகத்தால் இந்த தொழில் அழிந்து விடக்கூடாது என்பதற்காகப் புதுவித வடிவங்களில் கயிற்றுக் கட்டில் தயாரித்து வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றனர்.
மேலும் இவர்கள் கயிற்றுக் கட்டிலைத் தாண்டி வண்ண வண்ணக் கயிறுகளைக் கொண்டு வகைவகையாய் ஊஞ்சல், நாற்காலி, சோபா, டீபாய் போன்றவற்றையும் தயாரிக்கின்றனர். இவர்களது இந்த புதுமையான முயற்சி வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுப்பதால் மீண்டும் கயிற்றுக் கட்டில் பக்கம் மக்களது கடைக்கண் பார்வை திரும்பியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலை… எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸில் 200 காலியிடங்கள்…
கயிற்றுக் கட்டிலில் படுப்பதால் சுகப்பிரசவம், முதுகு தண்டுவடப் பிரச்சனை நீங்குவது, சீரான ரத்த ஓட்டம் போன்ற நற்பயன்கள் கிடைப்பதாகக் கூறுகின்றனர். இந்தக் கயிற்றுக் கட்டில் தயாரிப்பதற்காக விளைந்த பூவரச மரம், கருவேல மரம், தேக்கு மரம், பொரச மரம் மற்றும் மூங்கில் ஆகிய மரங்களைக் கொண்டே கட்டில் சட்டம் தயாரிக்கப்படுகிறது. இந்த மரக்கட்டைகளிலும் உடலுக்கு நன்மை பயக்கும் பல விஷயங்கள் அடங்கி இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
செயற்கையான பஞ்சு கொண்டு தயாரிக்கும் மெத்தைகளில் உறங்குவதால் உடல் வெப்பநிலை உயர்ந்து பல்வேறு உபாதைகள் ஏற்படுகிறது. மேலும் உடல் உஷ்ணத்தால் உள் மூலம், வெளி மூலம், பௌத்திரம் போன்ற வியாதிகள் வரக்கூடும்.
இதனைத் தவிர்க்கவே நம் முன்னோர்கள் கயிறு கொண்டு பின்னப்பட்ட கட்டில்கள், நாற்காலிகளைப் பயன்படுத்தி வந்தனர். கயிற்றுக் கட்டில்களில் காற்றோட்டம் நிறைந்து காணப்படும். அதனால் உடல் உஷ்ணம் அடைவதோ, அதனால் ஏற்படும் பிரச்சினைகள் ஏதும் இருக்காது. இதனால் நம் முன்னோர்களும் நலமுடன் வாழ்ந்து வந்தனர்.
இதையும் படிங்க: வீட்டில் பணவரவு அதிகரிக்கனுமா… அப்போ வெள்ளிக்கிழமையில் வெட்டிவேரை பயன்படுத்தினால் போதும்…
இந்த கயிற்றுக் கட்டில் தயாரிப்பு குறித்து வியாபாரி கூறுகையில், “இந்தக் கயிற்றுக் கட்டில் தொழில் காலப்போக்கில் நலிவடைந்து காணப்படுகிறது. இதனை மீட்டெடுக்கவே இத்தொழிலில் நாங்கள் பல புதுமைகளைப் புகுத்தி உள்ளோம்.
இந்த காலகட்டத்தில் கயிற்றுக் கட்டில் பயன்பாடு மிகக் குறைவாகவே காணப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு கயிற்றுக் கட்டில்களின் பயன்பாட்டைப் பெருக்கவே புதிய முயற்சிகளைக் கையாண்டு வருகிறோம். வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காகக் கயிற்றுக் கட்டில்களில் எண்ணற்ற வடிவங்களில் தயார் செய்து வருகிறோம்.
கயிறுகளைப் பின்னி கட்டில் தயாரிப்பது குறித்து பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் நாங்கள் அதிலும் புதுமையாகக் கயிறுகளைப் பின்னி டீபாய் , ஊஞ்சல், சோபா போன்று வகைவகையாகத் தயாரிக்கிறோம். இது வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்கிறது. நாங்கள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் கூட எங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்துள்ளோம்.
இதையும் படிங்க: +2 படித்தவர்களுக்கு மத்திய அரசில் 2006 காலியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க…
ஒரு கயிற்றுக் கட்டி, சோபா தயாரிக்க 2 முதல் 3 நாட்கள் வரை ஆகும். நாங்கள் காட்டன் கயிறுகள் தன பயன்படுத்துகிறோம். மேலும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ற அளவுகளிலும் நாங்கள் கட்டில், சோபாக்களை தயாரித்துக் கொடுக்கிறோம். கட்டில் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அளவைப் பொறுத்து விற்பனை செய்கிறோம். மூங்கில் கட்டில் ரூ.2 ஆயிரத்து 500 முதலும், சோபா ரூ.10 ஆயிரம் முதலும் விற்பனை செய்து வருகிறோம்.
கயிற்றுக் கட்டில்களின் மகத்துவத்தைப் புரிந்த பெரும்பாலானோர் இன்றும் அதனை விரும்பி உபயோகித்து வருகின்றனர். இந்த காலகட்டத்தில் நலிவடைந்து வரும் தொழில்களில் கயிற்றுக்கட்டில் தொழிலும் ஒன்று. இதனை மீட்டெடுக்க மக்கள் பாரம்பரியக் கயிற்றுக் கட்டில்களை விரும்பிப் பயன்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.