Last Updated:
குணால் கம்ராவின் நையாண்டி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியினர் மும்பை காமெடி கிளப்பில் அடித்து சூறையாடினர்.
அரசியல், பொருளாதாரம் உட்பட சமூகத்தில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை, தனது காமெடியால் நையாண்டி செய்து புகழ்பெற்றவர் குணால் கம்ரா. இவர், அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் நகர்வுகளை கேலி செய்து வீடியோ வெளியிடுவதால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்த நிலையில், மும்பையில் உள்ள கிளப்பில் ஸ்டேண்ட் அப் காமெடி செய்த குணால் கம்ரா, பாஜக மற்றும் சிவசேனா கட்சி குறித்து விமர்சித்துள்ளார். ஒரு கட்டத்தில் மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என கூறினார்.
இதைக் கேட்டு சிவசேனா கட்சியில் உள்ள அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். கோபம் கொப்பளிக்க அதே வேகத்தில் நிகழ்ச்சி நடைபெற்ற கிளப்பிற்கு வந்து அடாவடியில் ஈடுபட்டனர். அங்கிருந்த சேர்களை தூக்கி வீசி பறக்கவிட்ட தொண்டர்கள், குணால் கம்ராவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள் : இரவில் உலாவரும் டவுசர் கொள்ளையர்கள்.. மதுரையை கலங்கடித்த சம்பவம்.. பின்னணியில் அதிர்ச்சி!
மேலும், அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் ரவுண்டு கட்டி அச்சுறுத்தினர். இச்சம்பவம் குறித்து காமெடி கிளப் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கிளப்பை சூறையாடிய 11 பேரை கைது செய்துள்ளனர்.
சிவசேனா கட்சியினர் தாக்குதல் நடத்தியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் வரம்பு மீறி யாரும் பேசக் கூடாது என்று மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
எனவே, நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். பிரபல நகைச்சுவை கலைஞரின் நையாண்டி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியினர், காமெடி கிளப்பை அடித்து சூறையாடிய சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
March 24, 2025 9:43 PM IST


