Last Updated:
குறுவை நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற மாநில இயக்குநர் வழங்கிய முக்கிய வேளாண் ஆலோசனைகள்.
விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், வேளாண்மைத் துறையின் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் இயந்திரம் மூலம் நடவு செய்யப்பட்டுள்ள நெல் வயல்களை, மாநில வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவன இயக்குநர் சங்கரலிங்கம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, குறுவை சாகுபடியில் அதிக மகசூல் பெற விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து அவர் விரிவாக விளக்கினார்.
நெற்பயிரில் தூர் (தளிர்) பிடிக்கும் திறனை அதிகரிக்கவும், மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்தவும் ஏக்கருக்கு 200 கிலோ ஜிப்சம் இட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். இதன் மூலம் பயிருக்கு தேவையான கால்சியம் மற்றும் கந்தகச் சத்துக்கள் கிடைப்பதுடன், மண்ணின் உவர்த்தன்மையும் குறையும் என்றார்.
நெல் வயல்களில் கோனோவீடர் மற்றும் பவர் வீடர் கருவிகளைப் பயன்படுத்தி, 10 நாள் இடைவெளியில் நான்கு முறை குறுக்கும் நெடுக்குமாக இயக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் களைகள் கட்டுப்படுத்தப்படுவதுடன், அவை மண்ணில் மக்கி இயற்கை உரமாக மாறும். மேலும், வேர்களுக்கு போதிய காற்றோட்டம் கிடைப்பதால் தூர் பிடிப்பு அதிகரித்து, மகசூலும் உயரும் என்றார். நெற்பயிரின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும், திரட்சியான நெல்மணிகள் உருவாகவும், ஏக்கருக்கு 5 கிலோ நெல் நுண்ணூட்டக் கலவையை பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.
இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு பெற, நடப்பு குறுவை நெற்பயிரை வரும் 31-ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மாநில இயக்குநரின் இந்த ஆலோசனைகள், குறைந்த செலவில் அதிக மகசூல் பெற்று, குறுவை சாகுபடியை லாபகரமாக மாற்ற விவசாயிகளுக்கு பெரிதும் உதவும் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

