Last Updated:
20 வயது மாணவர் ஒருவர், செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி தன்னுடன் படிக்கும் மாணவிகளை ஆபாச படங்களாக உருவாக்கியதாகக் கூறி கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப முன்னேற்றம் பல வசதிகளைக் கொண்டு வந்தாலும், கூடவே சில அபாயங்களையும் சேர்த்தே கொண்டு வருகிறது. சமீப காலமாக செயற்கை நுண்ணறிவு புரட்சி உலகையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில், இதன் ஆபத்து எந்தளவிற்கு இருக்கும் என்பதை போபால் சம்பவம் எடுத்துக் காட்டியுள்ளது.
நயா ராய்ப்பூரில் உள்ள சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை (IIIT) சேர்ந்த 20 வயது மாணவர் ஒருவர், செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி தன்னுடன் படிக்கும் மாணவிகளை ஆபாச படங்களாக உருவாக்கியதாகக் கூறி கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் பிலாஸ்பூரைச் சேர்ந்த ரஹீம் அட்னான் என்றும் இந்தக் கல்லூரியில், பி.டெக் படித்து வருகிறார் என்றும் தெரிய வந்துள்ளது. இவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவரிடம் ராய்ப்பூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அட்னான் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருளைப் பயன்படுத்தி குறைந்தது 36 மாணவிகளின் புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாச படமாக மாற்றியது தெரியவந்தது. அதேசமயம் இதுவரை, சமூக ஊடகங்களில் திரிபுபடுத்தப்பட்ட படங்கள் எதுவும் பரவவில்லை என்றும் அதிகாரிகள் தெளிவுப்படுத்தினர்.
அக்டோபர் 6-ம் தேதி, பல மாணவிகள் தங்கள் தனிப்பட்ட புகைப்படங்கள் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறி, IIIT நிர்வாகத்திடம் புகார் அளித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் புகார்களைத் தொடர்ந்து, கல்வி நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் குற்றம் சாட்டப்பட்டவரின் விடுதி அறையில் சோதனை நடத்தி, நூற்றுக்கணக்கான மாணவிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடங்கிய லேப்டாப், மொபைல் போன் மற்றும் பென் டிரைவை பறிமுதல் செய்தனர்.
“ஆபாசமான உள்ளடக்கத்தை உருவாக்க டிஜிட்டல் கருவிகளை தவறாகப் பயன்படுத்தியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், நாங்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அனைத்து மின்னணு சாதனங்களையும் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளோம்,” என்று ஐஐஐடி ராய்ப்பூரின் பதிவாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாஸ் கூறினார். வழக்கை மேற்பார்வையிடவும், மாணவிகளின் புகைப்படங்கள் இணையதளத்தில் பரவாமல் பார்த்துக் கொள்ளவும் மூன்று பேர் கொண்ட பெண்கள் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மாணவரின் அறையிலிருந்து கைப்பற்றப்பட்ட சாதனங்களின் டிஜிட்டல் கையாளுதலின் அளவையும், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றவர்களுடன் இதைப் பகிர்ந்து கொண்டாரா என்பதையும் கண்டறிய தடயவியல் பரிசோதனைகள் நடத்தப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட மாணவர் கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
“குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பிலாஸ்பூரில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக ராய்ப்பூருக்கு அழைத்து வரப்பட்டார். அவரது லேப்டாப் மற்றும் மொபைல் போன் தடயவியல் நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அவர் வேறு யாரிடமாவது தகவல்களைப் பகிர்ந்து கொண்டாரா என்பதையும் நாங்கள் விசாரித்து வருகிறோம்” என்று ராக்கி காவல் நிலைய பொறுப்பாளர் ஆஷிஷ் ராஜ்புத் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் தனது சாதனங்களில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவிகளின் படங்கள் மற்றும் வீடியோக்களை சேமித்து வைத்திருந்ததாகத் தெரிகிறது. இணையத்தில் ஏதேனும் உள்ளடக்கம் பதிவேற்றப்பட்டதா என்பதை சரிபார்க்க, போலீசார் தற்போது சைபர் நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
October 24, 2025 12:02 PM IST


