Last Updated:
ஏஐ மாநாட்டு அரங்கில் இளைஞர் காங்கிரசார் மேலாடையின்றி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லி பாரத் மண்டபத்தில் கடந்த 16ஆம் தேதி முதல் ஏஐ உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. உலகளவில் கவனம் பெற்றுள்ள இந்த ஏஐ மாநாட்டில், இளைஞர் காங்கிரசார் மேலாடை இன்றி திடீரென நுழைந்ததால் பதற்றமான சூழல் உருவானது.
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
இதற்கு எதிர்வினையாற்றியுள்ள பாஜக ஐடி விங், இளைஞர் காங்கிரசின் செயல்பாடு ‘தேசிய அவமானம்’ என விமர்சித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், காங்கிரஸ் அச்சத்தில் இருப்பதாகக் கூறினார். இளைஞர் காங்கிரசை கண்டித்து பாஜகவினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
முன்னதாக இந்த மாநாட்டில், உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த கோடியாஸ் பல்கலைக்கழகம் ரோபோ நாய் ஒன்றை காட்சிப்படுத்தியது. இந்த வீடியோ அதிகம் கவனம் பெற்ற நிலையில், மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டது சீனாவைச் சேர்ந்த Unitree Go2 என்ற ரோபோ என்பதை தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினர்.
ஒரு வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தை இந்தியக் கண்டுபிடிப்பாகக் காட்டி முதலீடுகளை ஈர்க்க முயன்றதாக கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து, மாநாட்டின் கண்காட்சி அரங்கை காலி செய்து வெளியேறுமாறு கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்திற்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து, அப்பல்கலைக்கழகம் மாநாட்டில் இருந்து வெளியேறியது. இந்நிலையில், தற்போது இளைஞர் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


