சமீபத்தில் டீப்சீக் என்ற நுண்ணறிவு செயலியை சீனா அறிமுகம் செய்தது. இது சிலிகான் பள்ளத்தாக்கு முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. இதற்கு அதுவரை செயற்கை நுண்ணறிவுத் துறையில் அமெரிக்கா மட்டுமே கோலோச்சி வந்ததுதான் காரணம். இந்த செயலி அறிமுகமானது முதல் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது. இதனால் மெட்டா, மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.

இதை உருவாக்க 6 மில்லியன் டாலர் அளவுக்கு மட்டுமே செலவானதாக சீனா ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது கூகுள் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் செலவிடும் தொகையைவிட மிகவும் குறைவாகும். முன்னதாக செயற்கை நுண்ணறிவிற்கு தேவையான உயரிய சிப் தொழில்நுட்பத்தை சீனாவிற்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்கா கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்தசூழலில்தான் சீனாவின் டீப்சீக் செயலி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் ட்ரம்பின் ஆலோசகரான மார்க் ஆண்டர்சன், “ஏ.ஐ துறையின் ஸ்புட்னிக் தருணமாக டீப்சீக் இருக்கிறது” என தெரிவித்திருக்கிறார். இதை உறுதிப்படுத்தும் விதமாக சீனாவின் திட்டங்கள் இருக்கின்றன என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், மின்சார கார்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பேட்டரி தொழில்நுட்பம் போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்துவதற்கு சீனா தயாராகி வருகிறது. வரும் 2030-ம் ஆண்டுக்குள் தொழில்நுட்ப வல்லரசாக மாறுவதற்கான முயற்சியில் சீனா தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒருபகுதிதான் டீப்சீக்.

இதன் மூலமாக திட்டமிட்டதுபோலவே உலகின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பியிருக்கிறார்கள். அங்கு 4,500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஏஐ உருவாக்கி விற்பனை செய்கின்றன. சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள பள்ளிகளில், இந்த ஆண்டு இறுதியில் தொடக்க மற்றும் இடைநிலை மாணவர்களுக்கு ஏஐ படிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகங்கள் ஏஐ இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு ஏன் அங்கு சிறுவர்களுடன் இணைந்து ரோபோக்கள் சதுரங்கம் விளையாடுகிறது.
இதற்கான அடித்தளம் கடந்த 2017-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அப்போது நாட்டின் முன்னேற்றத்திற்கு செயற்கை நுண்ணறிவு முக்கிய உந்து சக்தியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது, சீனா. ஆனால் சீன நிறுவனங்கள் இந்தத் தடைகளைத் தாண்ட முடியும் என்பதை டீப்சீக் காட்டியுள்ளது. இது சிலிக்கான் பள்ளத்தாக்கையும் தொழில் வல்லுநர்களையும் திகைக்க வைத்துள்ளது.

இந்தசூழலில்தான் ஏஐ துறையில் பெரும் முதலீடுகளை சீனா செய்கிறது. அதாவது அடுத்த 15 ஆண்டுகளில் 10 டிரில்லியன் சீன யுவானை முதலீடு செய்ய சீனா திட்டமிட்டுள்ளது. சீனாவின் பொறியியல் வெற்றிக்கான ரகசியங்களில் அதன் இளைஞர்களும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். கடந்த 2020-ம் ஆண்டில் நாட்டின் 3.5 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தில் பட்டம் பெற்றுள்ளனர். இது பிற நாடுகளைவிட மிகவும் அதிகமாகும்.
டீப்சீக் உட்பட ஆறு உள்நாட்டு ஏ.ஐ நிறுவனங்களை இணையவாசிகள் டிராகன்கள் என்று செல்லப்பெயர் வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த கண்காட்சியில் இடம்பெற்ற ரோபோக்கள் மக்களிடம் வரவேற்பை பெற்றது. இதேபோல் மனித உருவம் கொண்ட ரோபோக்களுக்கிடையேயான கால்பந்து போட்டி ஒன்றும் நடைபெற்றது. அப்போது ரோபோக்கள் சிவப்பு மற்றும் நீல நிற ஜெர்சி அணிந்திருந்தன. போட்டியில் ரோபோக்கள் மோதிக்கொண்டபோது அவை கீழே விழுந்தன.
அப்போது அவற்றில் ஒன்றை ஸ்ட்ரெச்சரில் வைத்து மைதானத்திலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டது. இதை பார்த்து மக்கள் ரசித்தனர். இவ்வளவு தூரம் சீனாவில் தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும் டீப்சீக், ரெட்நோட், டிக் டாக் போன்ற சீன செயலிகளால் சேகரிக்கப்படும் தரவுகளை சீன கம்யூனிஸ்ட் கட்சி அணுக முடியும் என்கிற சர்ச்சையும் நிலவுகிறது. ஆனால் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்கிறது என்கிறார்கள்.
இந்தசூழலில்தான் ஏஐ துறையில் இந்தியாவின் திறன்கள் குறித்த பேச்சும் எழுந்திருக்கிறது. சமீபத்தில் மத்திய பட்ஜெட்டில் செயற்கை நுண்ணறிவு மையங்களுக்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் 200 தொடக்கநிலை நிறுவனங்கள் ஏஐ தொடர்பாக வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் கல்வி, ஆராய்ச்சி, அரசாங்கக் கொள்கைகளில் சில மேம்பாடுகளைச் செய்ய வேண்டிய சுழல் இருக்கிறது. ஏற்கெனவே 5 ஆண்டுகள் ஏஐ தொழில்நுடப்த்தில் அமெரிக்கா, சீனாவைவிட இந்தியா பின்தங்கியிருக்கிறது. எனவே விரைந்து செயல்படாவிட்டால் மேலும் பின்தங்க கூடும் என்கிறார்கள் அறிவியல் வல்லுநர்கள். எனவே இந்தியா என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.!
வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks