எவரெஸ்ட் சிகரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சாகச வீரர்களின் கூட்டம் அலைமோதும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
இந்தியாவின் பெருமையான இமயமலையில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே, அக்டோபர், நவம்பர் மாதங்களில் சாகச வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுகின்றனர். குறிப்பாக, நேபாள நாட்டில் உள்ள அடிவார முகாமில் இருந்து மலையேறித் தொடங்குகின்றனர். இந்த ஆண்டில் மே 21ஆம் தேதி வரை நேபாளத்தில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏற சுமார் 900 மலையேற்ற வீரர்கள் பதிவு செய்தனர். இதில் 268 பேர் மட்டுமே எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு சாதனை படைத்துள்ளனர். மற்றவர்கள் பாதி வழியிலேயே திரும்பி விட்டனர்.
இந்நிலையில், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர்களின் வீடியோ காட்சிகளை இந்தியாவைச் சேர்ந்த ராஜன் துவிவேதி என்பவர், கடந்த மே 20ஆம் தேதி சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் ஏராளமான வீரர்கள் கயிறு உதவியுடன் ஒருவர் பின் ஒருவராக மலையேறி செல்கின்றனர். எறும்புகள் ஊர்வதைப் போல, மிக நீண்ட வரிசையில் சாகச வீரர்கள் மலையேறும் காட்சி சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
இதையும் படிங்க : தவிர்க்க முடியாத மற்றொரு தொற்றுநோய் – எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானிகள்!
உலகம் முழுவதும் இருந்து சுமார் 500 வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயற்சி செய்ததாகவும், இதில் 250 முதல் 300 பேர் வரை மட்டுமே எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியதாகவும் ராஜன் துவிவேதி பதிவிட்டுள்ளார். உறையவைக்கும் குளிரில் பனிமலையில் ஏறுவது சாதாரண விஷயம் கிடையாது என்றும், பனியால் கண்பார்வை பாதிக்கப்படுவதோடு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளும் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இந்த ஆண்டில் இதுவரை 414 வெளிநாட்டினர் எவரெஸ்ட் மலையில் ஏற பதிவு செய்ததாகவும், அவர்களுக்கு உதவியாக நேபாளத்தைச் சேர்ந்த 500 வழிகாட்டிகளும் சென்றதாகவும், மொத்தமாக 900க்கும் மேற்பட்டோர் எவரெஸ்ட் சிகரத்திற்கு செல்ல மலையேறியதாகவும் நேபாள அரசு தெரிவித்துள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பனிச்சரிவில் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவரும், நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட இந்த ஆண்டில் இதுவரை 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
