இந்தியா – பாகிஸ்தான் இடையே தாக்குதல்களை நிறுத்த முடிவெடுக்கப்பட்டதால், எல்லையில் அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், நேற்றிரவு 9 மணியளவில் ஜம்மு-காஷ்மீரின் அக்னூர், கத்துவா, சம்பா, சுந்தர்பானி, ஆர்.எஸ்.புரா, உதம்பூர், நவ்ஷேரா உள்ளிட்ட இடங்களில் அத்துமீறி பறந்த பாகிஸ்தான் டிரோன்களை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.
ஸ்ரீநகரில் மீண்டும் பலத்த சத்தம் கேட்டதாக முதலமைச்சர் உமர் அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனால், ஜம்மு-காஷ்மீரிலும், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள இடங்களிலும் மின்சாரம் முழுமையாக நிறுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சிக்கு பதிலடி கொடுக்கப்பட்டது.
குஜராத்தின் கட்ச், பஞ்சாப்பின் பதான்கோட், ராஜஸ்தானின் பொக்ரான் உள்ளிட்ட பகுதிகளிலும் தாக்குதல் நிறுத்தத்தை மீறி ஏவப்பட்ட பாகிஸ்தானின் டிரோன்களை, இந்திய படைகள் நடுவானிலேயே இடைமறித்து தாக்கி அழித்தன. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் நக்ரோடாவில் உள்ள ராணுவ முகாம் அருகே மர்ம நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில், ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். முகாம் அருகே தாக்குதல் நடத்திவிட்டு ஒருவர் தப்பிச் சென்றதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதனிடையே, நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான மகாராஷ்டிரா மாநிலம் புனே விமான நிலையத்திலும் நேற்று முழுமையாக மின்சாரம் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. நேற்றிரவு 10.30 மணிக்கு இரண்டாவது முறையாக பேச்சுவார்த்தை நடைபெற்றதை தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நடைபெறவில்லை என பாதுகாப்புப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இரவு 10.30 மணியளவில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் சண்டை நிறுத்தம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தான் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். நள்ளிரவில் செய்தியாளர்களைச் சந்தித்த விக்ரம் மிஸ்ரி, புரிந்துணர்வை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி டிரோன்களை ஏவியதாகவும், அதற்கு தகுந்த பதிலடியை இந்திய படைகள் அளித்ததாகவும் குறிப்பிட்டார். தாக்குதலுக்கு தகுந்தபடி உரிய பதிலடியை அளிக்கும் வகையிலான அதிகாரத்தை ராணுவத்துக்கு வழங்கியிருப்பதாகவும் மிஸ்ரி குறிப்பிட்டார்.
Jammu,Jammu,Jammu and Kashmir

