எதிரும் புதிருமாய் இருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் டெஸ்லா தலைவர் எலான் மஸ்க், கடந்த ஆண்டு அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின் போது கைக்கோர்த்தனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், ட்ரம்ப், “DOGE’ என்னும் ஸ்பெஷல் துறையை தொடங்கினார். இது அமெரிக்க அரசின் தேவையில்லாத செலவுகளை குறைக்கவும், அரசு நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தவும் அறிவுரை கூறத் தொடங்கப்பட்ட துறை ஆகும். இது அரசு துறை அல்ல.
இந்த துறையை எலான் மஸ்க் தலைமை தாங்குவர் என ட்ரம்ப் முன்னர் அறிவித்தார். தேவையில்லாத சர்ச்சைகள் எழவே, அவர் அந்தத் துறையில் இருக்கும் சம்பளம் பெறாத தன்னார்வப் பணியாளர் என்று விளக்கப்பட்டது.
இந்தப் பதவிக்கு ஒரு ஆண்டில் 130 நாள்கள் மட்டுமே பொறுப்பு. ஆக, நாளையோடு (மே 30) எலான் மஸ்கின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் எலான் மஸ்க், “சிறப்பு அரசு ஊழியராக என்னுடைய பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. அரசின் தேவையில்லாத செலவுகளை குறைக்க இதன் மூலம் வாய்ப்பளித்த அதிபர் ட்ரம்பிற்கு எனது நன்றி. டோஜ் வரும் நாள்களில் இன்னும் பலப்படும் மற்றும் அரசு செயல்பாடுகளில் பங்கு வகிக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

