
மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு 12.00 மணி முதல் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
குறித்த அறிவிப்பின் அடிப்படையில், இரண்டு பிரதான எரிபொருள் வகைகளின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இந்த விலைத் திருத்தங்களுக்கு இணையாக, லங்கா IOC நிறுவனமும் தமது எரிபொருள் விலைகளைத் திருத்தியுள்ளது.
பெட்ரோல் விலை குறைப்பு
லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் லீற்றரின் விலை ஐந்து ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அதன் புதிய விலை 294 ரூபா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா IOC நிறுவனத்தைப் பொறுத்தவரை, 299 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை, ஐந்து ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 294.00 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் டீசல் விலை உயர்வு
லங்கா சூப்பர் டீசல் லீற்றரின் விலை ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 318 ரூபா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், லங்கா IOCயின் சுப்பர் டீசலின் விலை ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 318.00 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (முன்னதாக, IOCயின் சுப்பர் டீசலின் விலை 313 ரூபாவாக இருந்தது).
விலை மாற்றமில்லாத எரிபொருட்கள்
ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
ஒரு லீற்றர் 95 ஒக்டேன் பெற்றோலின் விலை (ரூ. 335) எவ்வித மாற்றமும் இன்றி தொடர்கிறது.
ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் (Auto Diesel) விலை (ரூ. 277) திருத்தப்படவில்லை.
ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலையிலும் (ரூ. 180) எவ்வித மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

