
பதுளை – கொழும்பு பிரதான வீதியின் புவகஹவெல பகுதியில் 33,000 லீற்றர் எரிபொருளுடன் பயணித்த பௌசர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது பௌசரில் ஏற்பட்ட கசிவு காரணமாக பெருமளவிலான எரிபொருள் வீதியெங்கும் வழிந்தோடியது.

இதனை அவதானித்த அப்பகுதி மக்கள் மற்றும் பாதசாரிகள், தீ விபத்து ஏற்படும் அபாயத்தையும் பொருட்படுத்தாமல் வாளிகள் மற்றும் போத்தல்களுடன் அவ்விடத்தில் திரண்டனர்.

வீதியோர வடிகால்களில் ஓடிய எரிபொருளைச் சேகரிப்பதற்காக மக்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு ஆர்வம் காட்டியதால் அந்த இடத்தில் பெரும் பதற்றமான சூழல் நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், பாதுகாப்பு கருதி மக்களை அப்புறப்படுத்தியதுடன் போக்குவரத்தைச் சீர்செய்யும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

இயந்திரக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

