முறையற்ற விதத்தில் பொஸ்பேட் ஏற்றுமதிக்கு உதவி புரிந்து 81 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ், பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொஸ்பேட் ஏற்றுமதி செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தமை மற்றும் அந்நிறுவனங்களுக்குத் தேவையான ஏற்றுமதி உரிமங்களைப் பெற்றுத் தருவதற்கு உதவி புரிந்தமைக்காக, குறித்த நிறுவனங்களிடமிருந்து 81 இலட்சம் ரூபாவை அவர் இலஞ்சமாகப் பெற்றதாக ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.
இக் குற்றச்சாட்டுத் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் சாமர சம்பத் தசநாயக்க முன்னிலையாகியிருந்தார். அதிகாரிகளால் சுமார் 3 மணித்தியாலங்களுக்கும் மேலாக தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதனைத் தொடர்ந்து அவர் முறைப்படி கைது செய்யப்பட்டார்.சாமர சம்பத் தசநாயக்க முன்னதாகக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், அவரது தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சுமதிபால லியனாராச்சி என்பவரும் இந்த விசாரணை தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றது.

