Last Updated:
அமெரிக்காவின் சிறார் பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததாக இங்கிலாந்து மன்னர் சார்லஸின் சகோதரர் ஆண்ட்ரூ அந்நாட்டு காவல்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். 400 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அரசர் குடும்பத்தில் இருந்து ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறுமிகளை கடத்திச் சென்று பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அரச குடும்பத்தினருடன் நெருக்கமாக இருந்ததாகவும், முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கு சிறுமிகளை அழைத்துச் சென்று பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் கடந்த 2019 ஆகஸ்ட் 10 அன்று சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்ட 30 லட்சம் பக்கங்கள் கொண்ட ‘எப்ஸ்டீன் கோப்புகளில்’ அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டன. பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடன் அவர்கள் உரையாடிய மின்னஞ்சல்கள், பகிர்ந்த வீடியோக்கள், படங்கள் வெளியாகி உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
குறிப்பாக இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் சகோதரரும், முன்னாள் இளவரசருமான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்ஸர் அமெரிக்காவுக்கான வர்த்தக தூதராகப் பதவி வகித்தபோது எப்ஸ்டீனுடன் ரகசிய ஆவணங்களை மின்னஞ்சல் மூலம் பகிர்ந்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. இதில், ஆசிய நாடுகளுக்கான வர்த்தகப் பயணங்கள் குறித்த ரகசியத் தகவல்களை அவர் எப்ஸ்டீனுடன் பகிர்ந்து கொண்டது அம்பலமானது.

ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்ஸரின் மீது முன்வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளால் உருவான அழுத்தத்தைத் தொடர்ந்து அவரது இளவரசர் பட்டத்தை மன்னர் மூன்றாம் சார்லஸ் பறித்து உத்தரவிட்டார். தனது தம்பி ஆண்ட்ரூ மீதான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்றும் மன்னர் அறிவித்தார். இந்நிலையில், ஆண்ட்ரூ தனது 66ஆவது பிறந்தநாளை கொண்டாடிய சூழலில், நார்போக்கில் உள்ள சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் தங்கியிருந்த அவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நடவடிக்கையில் முன்னாள் இளவரசரின் பெயரைக் குறிப்பிடாமல், காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது. விசாரணையின் ஒரு பகுதியாக, பொது அலுவலகத்தில் தவறான நடத்தை புரிந்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில், நார்போக் பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க ஒருவரைக் கைது செய்துள்ளதாக மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, அவருக்குச் சொந்தமான பெர்க்ஷயர் (Berkshire) மற்றும் சாண்ட்ரிங்ஹாம் இல்லங்களில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இங்கிலாந்து நாட்டின் சட்டப்படி ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரிடம் இருந்து கைரேகைகள் மற்றும் டி.என்.ஏ. பரிசோதனை எடுக்க காவல்துறைக்கு உரிமை உண்டு. அதன்படி, ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்ஸரிடம் இருந்து கைரேகைகள் மற்றும் டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தனது சகோதரர் விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்ய வேண்டும் என்று மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் – வின்ட்ஸர் பற்றிய செய்திகளையும், பொது அலுவலகத்தில் தவறான நடத்தை குறித்த சந்தேகத்தையும் அறிந்து மிகவும் கவலையடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக லண்டனில் நடைபெற்ற பேஷன்ஷோ நிகழ்ச்சியில் மன்னர் சார்லஸ் பங்கேற்றார். அப்போது, அவரது சகோதரர் கைது குறித்த கேள்விக்கு மன்னர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கைது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் கீர் ஸ்டார்மர், சட்டத்திற்கு மேலானவர் யாருமில்லை என்று கூறியுள்ளார். இங்கிலாந்தில் மன்னர் குடும்பத்தை சேர்ந்த முதலாம் சார்லஸ் கடந்த 1647 ஆம் ஆண்டு வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து தற்போது மன்னர் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சுமார் 12 மணி நேர விசாரணைக்குப் பிறகு ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் விடுவிக்கப்பட்டார். பதவியை தவறாகப் பயன்படுத்திய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட ஆண்ட்ரூவை ‘அய்ல்ஷாம்’ நகர காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரித்தனர். விசாரணைக்குப் பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் தனது இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

