லாகூர்: உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய மூன்று ஃபார்மெட்டுகளில் இருந்தும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பை பாபர் அஸம் ராஜினாமா செய்ய பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அஃப்ரிடி.
ஷாஹீன் அஃப்ரிடி தலைமையின் கீழ் பாகிஸ்தான் அணி நியூஸிலாந்துக்கு எதிரான தொடரை இழந்ததை அடுத்து தற்போது மீண்டும் பாபர் அஸமை கேப்டனாக்கியுள்ளது அந்நாட்டின் கிரிக்கெட் நிர்வாகமான பிசிபி. “எங்கள் நோக்கம் ஒன்றே, அது பாகிஸ்தானை உலகின் சிறந்த அணியாக மாற்ற உதவுவது” என்று ஷாஹீன் அஃப்ரிடியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதற்கு பிசிபி இவ்வாறு காரணம் கூறியது.
பிசிபியின் இந்த நடவடிக்கையால் ஷாஹீன் அஃப்ரிடி கோபத்தில் இருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதற்கிடையே, கேப்டன் பதவி நீக்கம் குறித்து இதுவரை நேரடியாக எதுவும் பேசாத ஷாஹீன் அஃப்ரிடி முதல்முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 29 வினாடிகள் கொண்ட ஒரு வீடியோவை ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார்.
அதில், “நான் எவ்வளவு கொடூரமானவனாகவும் இரக்கமற்றவனாகவும் இருக்க முடியும் என்பதைக் காட்ட வேண்டிய நிலையில் என்னை ஒருபோதும் நிறுத்த வேண்டாம். என் பொறுமையை சோதிக்காதீர்கள். ஏனென்றால் நீங்கள் சந்தித்ததில் நான் மிகவும் அன்பான மற்றும் இனிமையான நபராக இருக்கலாம். ஆனால், நான் எனது வரம்பை அடைந்தவுடன், என்னால் செய்ய முடியும் என்று யாரும் நினைக்காத விஷயங்களை நான் செய்வதைப் பார்ப்பீர்கள்” என்று பதிவிட்டுள்ளார். பலரும் பிசிபிக்கு பதில் கொடுக்கும் இதனை ஷாஹீன் அஃப்ரிடி பதிவிட்டுள்ளார் என்று கூறி வருகின்றனர்.
எது எப்படியோ பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் பிரச்சினைகள் ஓய்ந்த பாடில்லை என்பது போல் தொடர்ச்சியாக பிரச்சினைகள் வந்துகொண்டிருக்கிறது என்பது மட்டும் நிதர்சனம்.