Last Updated:
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து அழகானந்தம் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயபால் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள கதிர்காமம் தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட அக்கட்சி நிர்வாகி அழகானந்தம் என்பவர் வாய்ப்பு கேட்டிருந்தார். இந்நிலையில், ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருக்கும் கே.எஸ். ரமேஷை அக்கட்சி வேட்பாளராக அறிவித்தது.
இதனையடுத்து கே.எஸ். ரமேஷ், என்.ஆர். காங்கிரஸ் சார்பில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இந்நிலையில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு கிடைக்காத அதிருப்தியில் இருந்த அழகானந்தம் சுயேச்சையாக தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்த விவகாரம், கதிர்காமம் தொகுதி மட்டுமின்றி புதுச்சேரியிலும், என்.ஆர். காங்கிரஸிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சூழலில், என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ். ரமேஷை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்த அக்கட்சி நிர்வாகி அழகானந்தத்தை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் அக்கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயபால்.
புதுச்சேரியில் உள்ள என்.டி.ஏ.வில் பாஜகவை மீறி ஏற்கனவே ஐந்து பேர் சுயேச்சையாக வேட்புமனுவை தாக்கல் செய்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர். அவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், என்.ஆர். காங்கிரஸில் இருந்து அழகானந்தம் நீக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Puducherry (Pondicherry)


