Last Updated:
3 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு, மாநிலத்திற்கு சுமார் ரூ.60,000 கோடி வருவாய் கிடைக்கும்
ஆந்திரப் பிரதேச மாநிலம் மதனாபல்லியில் ‘உலகளாவிய தோட்டக்கலை மையம்’ மற்றும் ‘இந்திய வேளாண்மைப் பள்ளி’ ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குநர் அனந்த் அம்பானி, ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.1 லட்சம் கோடி முதலீட்டில் உயிரி எரிவாயு ஆலைகள் நிறுவப்படவுள்ளதாக பிரம்மாண்ட அறிவிப்பை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அனந்த் அம்பானி, “இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நமது விவசாயிகள், தற்போது ஆற்றல் பாதுகாப்பையும் பலப்படுத்தி எரி பொருள் உற்பத்தியாளர்களாக மாறவுள்ளனர். இதற்காக ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.1 லட்சம் கோடி முதலீட்டில் சிபிஜி (CBG) ஆலைகளை அமைக்க ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. இதன் மூலம் 3 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு, மாநிலத்திற்கு சுமார் ரூ.60,000 கோடி வருவாய் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.
25 ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்திற்கு ஐ.எஸ்.பி வணிகப் பள்ளியைக் கொண்டு வந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தற்போது இந்திய விவசாயிகளுக்குத் தனியாக ஒரு ஐ.எஸ்.பி-யை (ISA) உருவாக்கியுள்ளார் என்று பாராட்டிய அனந்த் அம்பானி, விவசாயத்தை மேம்படுத்த நான்கு முக்கிய திட்டங்களை முன்வைத்தார்.
‘ஜியோ’ (JIO) நிறுவனம் மூலம் கிராமங்களிலேயே மெய்நிகர் வகுப்பறைகளை அமைத்து, இந்திய மொழிகளில் விவசாயிகளுக்குப் பயிற்சிகளை நேரடியாகக் கொண்டு சேர்ப்பது, ஜியோ கிருஷி தளம் மற்றும் ஜாம்நகரில் உள்ள அதிநவீன உயிர் ஆற்றல் ஆராய்ச்சி மையத்தின் (R&D) தொழில் நுட்பங்களை விவசாயிகளுடன் பகிர்வது, ஜாம்நகரில் உள்ள ‘வந்தாரா’ வனவிலங்கு மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நவீன கால்நடை வளர்ப்பை ஊக்குவிப்பது, கிராமப்புற இளைஞர்கள் விவசாயத்தை ஒரு பெருமைக்குரிய தொழிலாக மேற்கொள்ள தேவையான தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்குவது ஆகியவை இந்த திட்டங்களாகும்.
காந்தி ஜெயந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஜெயந்தி நாளில் தொடங்கப்பட்டுள்ள இந்த மையம், “ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விஞ்யான், ஜெய் அனுசந்தான்” எனும் நான்கு கோட்பாடுகளின் கீழ் இயங்கும் என்றும், செயற்கை நுண்ணறிவு (AI), ட்ரோன்கள் மற்றும் ரோபோட்டிக்ஸ் மூலம் விவசாயத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்றும் ஆனந்த் அம்பானி கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் “என்னை ஆந்திராவின் மகனாகக் கருதி, இம்மாநில வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு வழிகாட்டுங்கள்” என முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் அனந்த் அம்பானி நெகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டார்.


