‘‘அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிகம் வரி விதித்ததை எடுத்துக் கூறியதால், வரிகளை குறைக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது’’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு இந்தியா 100 சதவீதத்துக்கு மேல் வரி விதித்தது. இதனால் அமெரிக்காவால் தனது தயாரிப்புகளை இந்தியாவில் அதிகம் விற்பனை செய்ய முடியவில்லை. தரமான அமெரிக்க பொருட்களை, இந்தியர்களாலும் நியாயமான விலைக்கு வாங்க முடியாத நிலை இருந்தது. பெரும் பணக்காரர்கள் ஒரு சிலர் மட்டுமே, அதிக வரி செலுத்தி அமெரிக்க பொருட்களை வாங்கினர்.
பிரதமர் மோடி சமீபத்தில் அமெரிக்கா சென்று அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தபோது, அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிகம் வரிவிதிப்பது நியாயம் இல்லை என அதிபர் ட்ரம்ப் வெளிப்படையாக கூறினார்.
இந்தியாவில் வெளிநாட்டு கார்களுக்கு 110 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இது உலகிலேயே மிக அதிகம் என டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் கண்டனம் தெரிவித்தார். இந்த அதிகளவிலான வரிவிதிப்பு காரணமாகத்தான் இந்தியாவின் கார் சந்தையில் நுழையும் திட்டத்தை டெஸ்லா ஏற்கெனவே கைவிட்டது.
அமெரிக்காவுக்கு அதிகம் வரி விதிக்கும் இந்தியா, சீனா, கனடா, மெக்சிகோ போன்ற நாடுகளுக்கு, அதே அளவு பரஸ்பர வரிவிதிக்கும் திட்டத்தை ஏப்ரல் 2-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
இந்தியாவின் விவேக முடிவு: இதையடுத்து அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் வரியை குறைத்து, இருதரப்பு வர்த்தகத்தை சுமூகமாக மேற்கொள்ள இந்தியா முடிவெடுத்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் இந்தியா, அமெரிக்காவும் ஈடுபட்டுள்ளன. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்காவில் அந்நாட்டு வர்த்தக அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வரியை குறைத்து அனைத்து துறையிலும் இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்துவதுதான் இந்தியாவின் நோக்கம். இவ்வாறு ஜெய்ஸ்வால் கூறினார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியா மிக அதிகளவில் வரி விதிக்கிறது. இதனால் இந்தியாவில் எதையும் விற்க முடியாத சூழல் உள்ளது. இதனால் ஏப்ரல் 2-ம் தேதி முதல் பரஸ்பர வரிவிதிப்பு முறை அமலாகிறது. இது அமெரிக்காவுக்கு மிகப் பெரிய மாற்றமாக இருக்கும். இந்தியா தற்போது வரியை குறைக்க ஒப்புக் கொண்டுள்ளது. அவர்கள் அதிகம் வரிவிதித்ததை நாம் எடுத்துக் கூறியதே இந்த மாற்றத்துக்கு காரணம். இவ்வாறு அதிபர் ட்ரம்ப் கூறினார்.