நவநீதம் பிள்ளைக்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டுள்ளமை, உலகளாவிய மனித உரிமைகளுக்குக் கிடைத்த கூட்டு வெற்றியாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், தனது முன்னாள் பதவியாளரான நவநீதம் பிள்ளைக்கு இந்தச் சிறப்புமிக்க விருது கிடைத்துள்ளமைக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
“எனது சகோதரியும், என்னைவிட மூத்தவருமான நவி பிள்ளைக்கு இந்த அற்புதமான விருது கிடைத்துள்ளமைக்காக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என அவர் குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் சவால்
நவநீதம் பிள்ளைக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளமை முழுமையாகத் தகுதியானது எனக் கூறுவது கூட அவரது சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுவதாக அமையும் எனத் தெரிவித்த வோல்கர் டர்க், உலகின் பல்வேறு தளங்களில் மனித உரிமைகள் சவால்களுக்கு உள்ளாகியுள்ள தற்போதைய சூழலில் இந்த அங்கீகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்டார்.

குறிப்பாக, பெரும் அதிகாரங்களைக் கொண்ட தரப்பினரிடமிருந்தும் மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ள நிலையில், நவி பிள்ளைக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருது முக்கியத்துவம் பெறுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவை அனைத்திற்கும் அடிப்படையானவை என்பதை இந்த விருது மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகத்தில் பணியாற்றும் அனைவரின் சார்பிலும் நவி பிள்ளைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த வோல்கர் டர்க், அவர் தொடர்ந்து தமக்கும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கும் உத்வேகமளித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

