Last Updated:
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்யவுள்ள சுபான்ஷூ சுக்லா ஓரிரு நாளில் இந்திய மாணவர்களுடன் உரையாடுவார் எனக் கூறப்படுகிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா உடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாடினார்.
டிராகன் விண்கலம் மூலம் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா உட்பட 4 வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். அங்கு 14 நாட்கள் தங்கியிருக்க திட்டமிட்டுள்ள வீரர்கள், பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்திய வீரர் சுக்லா உடன் காணொளியில் உரையாடிய பிரதமர் மோடி, சுபான்ஷூ வெகு தொலைவில் இருந்தாலும் இந்தியர்களின் இதயத்திற்கு அவருடன் நெருக்கமாக இருப்பதாக நெகிழ்ச்சி தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய சுபான்ஷூ, பிரதமர் மோடி மற்றும் 140 கோடி இந்தியர்களின் வாழ்த்துக்கு நன்றி கூறினார். இந்த தருணத்தில் இந்தியராக பெருமை கொள்வதாகவும் சுபான்ஷூ நெகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் “விண்வெளியில் இருந்து உலகை பார்த்ததும் ஒட்டுமொத்த உலகமும் ஒன்றுதான் எனத் தோன்றியது. இங்கிருந்து பார்க்கும்போது எந்தவொரு எல்லைகளும் கண்ணுக்குத் தெரியவில்லை. மாநிலங்களும் இல்லை, நாடுகளும் இல்லை. நாமெல்லாம் மனிதநேயத்தின் ஓர் அங்கம். உலகமே நமது வீடு, நாம் அங்கு வசித்து வருகிறோம். வரைபடத்தில் காண்பதை விட விண்வெளியில் இருந்து மிகவும் பிரமாண்டமாக இந்தியா காட்சியளிக்கிறது.” என்றும் சுபான்ஷூ சுக்லா பேசினார்.
சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா தேசியக் கொடியின் பின்னணியில் பிரதமர் மோடியுடன் பேசினார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்யவுள்ள சுபான்ஷூ சுக்லா ஓரிரு நாளில் இந்திய மாணவர்களுடன் உரையாடுவார் எனக் கூறப்படுகிறது.
இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில், இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக விமானப்படை கேப்டன் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். இதையடுத்து ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு 41 ஆண்டுகள் கழித்து இரண்டாவது இந்தியராக விண்வெளிக்குச் சென்ற சுபான்ஷு சுக்லா, மூவர்ணக் கொடியுடன் பயணிப்பது குறித்து பெருமிதம் தெரிவித்தார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
June 28, 2025 10:01 PM IST
“எந்த எல்லைகளும் கண்ணுக்குத் தெரியவில்லை” – விண்வெளியில் இருந்து பிரதமரிடம் பேசிய சுபான்ஷூ சுக்லா!