Tamilnadu
oi-Velmurugan P
சென்னை: எந்தவித ஊழல் மற்றும் கமிஷன் குற்றச்சாட்டுகளுக்கும் இடமளிக்காமல் மிகச் சிறப்பான, நேர்மையான நிர்வாகத்தை வழங்கி வரும் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு எனது பாராட்டுகள். தமிழக மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்கான எனது பயணம் தொடரும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெகுவாக பாராட்டி உள்ளார். திமுக கூட்டணியில் உள்ள வைகோ, முதல்வர் விஜய்யை பாராட்டி இருப்பது திமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. வைகோவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
முதல்வர் விஜய்யை இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார். அதுபற்றி எக்ஸ் தள பக்கத்தில் வைகோ வெளியிட்டுள்ள பதிவில், இன்று மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து விரிவாக உரையாடினேன். ஸ்டெர்லைட் ஆலையை ‘க்ரீன் காப்பர்’ என்ற புதிய பெயரில் திறக்க எக்காரணம் கொண்டும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தேன்.

மேலும், ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள எனது 30 ஆண்டு கால நாடாளுமன்ற உரைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று, மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிடவுள்ள முதல் பிரதியைப் பெற்றுக்கொள்ள முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்தேன். அவரும் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார்.
ஊழல் குற்றச்சாட்டு இல்லை
எந்தவித ஊழல் மற்றும் கமிஷன் குற்றச்சாட்டுகளுக்கும் இடமளிக்காமல் மிகச் சிறப்பான, நேர்மையான நிர்வாகத்தை வழங்கி வரும் முதலமைச்சர் அவர்களுக்கு எனது பாராட்டுகள். தமிழக மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்கான எனது பயணம் தொடரும்!” இவ்வாறு கூறியிருந்தார். இது திமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
திமுக விமர்சனம்
ஏனெனில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, தவெக ஆதரவு நிலைப்பாட்டுடன் விஜய் மற்றும் அவரது கட்சியின் செயல்பாடுகள், ஆட்சியின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டியபடி உள்ளது. ஆனால் திமுகவோ எதிர்க்கட்சியாக தவெகவை விமர்சித்து வருகிறது. சோபா மாடல் அரசு என்று கூறித்தான் விமர்சனங்களை வைத்து வருகிறது.குறிப்பாக முதல்வர் விஜய் குறித்து உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலின் ஆகியோர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
விஜய்யை பாராட்டும் வைகோ மற்றும் அவரது மகன்
ஆனால் வைகோவும் அவரது மகன் துரை வைகோ ஆகியோர் அவர்களுக்கு நேர்மாறாக விஜய்யை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.இதனால் திமுக கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறுவது உறுதியாகி உள்ளது. ஆனால் இதுவரை மதிமுக அதிகாரப்பூர்வமாக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறவில்லை.. தவெகவை ஆதரிக்க மதிமுகவிற்கு எம்எல்ஏக்களும் இல்லை..
திமுக எம்எல்ஏக்கள்
ஜெயித்த இரண்டு எம்எல்ஏக்களுமே திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டவர்கள். அவர்கள் திமுகவின் எம்எல்ஏக்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் பதவியை ராஜினாமா செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள். இதனால் திமுக வைகோவின் செயல்பாடுகளால் கோபம் அடைந்தாலும் வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.. எனினும் திமுக ஆதரவாளர்கள் தொடர்ந்து வைகோவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.



