சைவ உணவு விரும்பிகளுக்காக அறிவிக்கப்பட்ட பச்சை நிற உடையுடனான சுத்த சைவ சேவைக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் ஆடைக் கட்டுப்பாட்டை திரும்பப் பெறுவதாக சொமேட்டோ உணவு டெலிவரி நிறுவனம் அறிவித்துள்ளது.
சொமேட்டோ உணவு டெலிவரி நிறுவனம் தங்களது சுத்த சைவ உணவு பிரிய வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ‘Pure Veg Mode’ என்ற சேவையை அறிவித்தது. சொமேட்டோவின் இந்த நகர்வு சைவ உணவு பிரியர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது. ஆனால், சமூகவலைதளங்களில் பச்சை நிற உடையுடனான சுத்த சைவ சேவைக்கு கடுமையான எதிர்ப்பலைகள் கிளம்பின. சில நடைமுறைச் சிக்கல்களைச் சுட்டிக்காடி விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும், பலரும் தாங்கள் சொமேட்டோ ஆப்பை அன் இன்ஸ்டல் செய்து அதன் ஸ்க்ரீன்ஷாட்டை சமூகவலைதளப் பக்கங்களில் பகிரத் தொடங்கினர்.
இந்நிலையில் சைவ உணவு விரும்பிகளுக்காக அறிவிக்கப்பட்ட பச்சை நிற உடையுடனான சுத்த சைவ சேவைக்கான பச்சை உடை பிரிவை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சொமேட்டோ நிறுவனத்தின் சிஇஓ தீபீர்ந்தர் கோயல் இன்று (புதன்கிழமை) எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “சுத்த சைவ உணவு விரும்பிகளுக்காக பிரத்யேக பிரதிநிதிகளை நாங்கள் பயன்படுத்தும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், அவர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு வாபஸ் பெறப்படுகிறது. சொமேட்டோவின் அனைத்து டெலிவரி பிரதிநிதிகளும் ஒரே மாதிரியாக சிவப்பு நிற உடையே அணிவார்கள்.
இதன் மூலம் வெளித்தோற்றத்தின் மூலம் உணவு டெலிவரி செய்வோர் சைவ உணவு விநியோகிக்கிறாரா அல்லது அசைவ உணவு விநியோகிக்கிறாரா என்பதைத் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் அவர்கள் உணவு டெலிவரி செய்யும்போது ஆப்பில் தாங்கள் சுத்த சைவ டெலிவரி குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதை அடையாளப்படுத்தி இருப்பார்கள். ஆகையால் சைவ உணவு விரும்பிகள் அவர்கள் பிரத்யேக சைவ உணவு டெலிவரி பிரதிநிதி என்ற நம்பிக்கையைப் பெறலாம்.
t1
மேலும், இதன் மூலம் எங்கள் டெலிவரி பணியாளர்கள் தேவையற்ற சிக்கல்களுக்கு ஆளாவது தவிர்க்கப்படும். இந்த இருவேறு நிற உடையால் சில குடியிருப்புவாசிகள் அவர்களது உரிமையாளர்களின் அதிருப்திக்கு உள்ளாகலாம் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. அதை நாங்கள் புரிந்து கொண்டோம். எங்களால் யாருக்கும் சிக்கல் ஏற்படக்கூடாது.
சில நேரங்களில் இத்தகைய எதிர்வினை கூட நன்மை தரும். நாங்கள் எப்போதும் எவ்வித பெருமையும், தலைக்கனமும் இல்லாமல் பொதுமக்கள் கருத்துகளுக்கு செவிசாய்ப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.