Last Updated:
எச்-1பி விசா குலுக்கல் முறையை ரத்து செய்து அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான எச்-1பி விசா நடைமுறையில் குலுக்கல் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்ற பிறகு விசா நடைமுறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்திவருகிறார். அந்த வரிசையில் தற்போது, விசாவில் குலுக்கல் முறையை ரத்து செய்துள்ளார். அதற்குப் பதிலாக அதிக ஊதியம் மற்றும் மிகச்சிறந்த பணித்திறன் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை தெரிவித்துள்ளது. தகுதியற்றவர்களைக் குறைந்த ஊதியத்தில் பணியமர்த்த குலுக்கல் முறை தவறாகப் பயன்படுத்துவதாகப் புகார்கள் எழுந்த நிலையில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த புதிய முறையினால் போட்டித்தன்மை அதிகரிப்பதோடு, திறமையானவர்களுக்கு மட்டுமே விசா கிடைப்பது உறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய எச்1-பி விசா விண்ணப்பங்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் 89 லட்ச ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக, சமூக ஊடகக் கணக்குகளை ஆய்வு செய்வது உள்ளிட்ட தீவிர கண்காணிப்புப் பணிகளும் வேகமெடுத்துள்ளன.


