பட்டிமன்ற மேடைப் பேச்சின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உருவாக்கியவர் பட்டிமன்றம் ராஜா.
பட்டிமன்றத்தைத் தாண்டி சில திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள சென்றவர், அங்கு தனக்கு உணவு கொடுத்த பெண்ணிடம் அவருடைய சாதி குறித்து பட்டிமன்றம் ராஜா கேட்டதாக பேஸ்புக் பக்கங்களில் சிலர் பகிர்ந்து வந்தனர்.
இப்படி பரவி வந்தத் தகவலைத் தொடர்ந்து, காணொளி மூலமாக பேசி அந்தத் தகவலை மறுத்திருக்கிறார் ராஜா.

பட்டிமன்ற ராஜா பேசுகையில், “அமெரிக்காவில் அட்லாண்டா மாநிலத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்காக நாங்கள் வந்திருந்தோம். அந்த நிகழ்வுக்கு வந்த பல தமிழ் சொந்தங்கள் தங்கள் இல்லங்களில் இருந்து சாப்பாடு செய்து எங்களுக்குக் கொண்டு வந்தார்கள்.
சில நேரங்களில் அங்குள்ள உணவு நம் ஊர் உணவுகளைவிட சுவையாக இருக்கும். அங்கு வருகிறவர்கள் தங்கள் ஊர் பெயரையும் சொல்லுவார்கள். அப்போது ஒருவர் என்னிடம் காரைக்குடியிலிருந்து வருவதாகச் சொன்னார்.
நான் அவரிடம் ‘செட்டிநாடா?’ என்று கேட்டதாகத்தான் நினைவில் இருக்கிறது. நான் அவரிடம் ‘செட்டியாரா?’ என்று கேட்கவில்லை. உணவு சுவையாக இருந்தது என்றுதான் நான் யோசித்தேன். அவர்கள் யார், எந்த சாதியினர் என்று யோசிக்கும் சின்ன புத்தி எனக்குக் கிடையாது.
