Last Updated:
ஓலா சிஇஓ பவிஷ் அகர்வால் மற்றும் சுப்ரதா குமார் மீது அரவிந்த் தற்கொலைக்கு தூண்டியதாக பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
ஊழியரை தற்கொலைக்கு தூண்டியதாக ஓலா சிஇஓ மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு
ஊழியரை தற்கொலைக்கு தூண்டியதாக ஓலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஓலா அலுவலகத்தில் அரவிந்த் என்ற 38 வயது இளைஞர் மின்னணு பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார்.2022ஆம் ஆண்டு முதல் அந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த அரவிந்திற்கு மூத்த அதிகாரிகள் கடுமையான வேலை பளு அளித்திருப்பதும், சம்பளம் கூட வழங்காமல் இழுத்தடித்திருப்பதும் தெரியவந்தது.
இதனால், கடுமையான மன உளைச்சலில் இருந்த அரவிந்த், கடந்த மாதம் 28ஆம் தேதி வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இதைத் தொடர்ந்து, இரண்டு நாட்கள் கழித்து அரவிந்தின் வங்கிக் கணக்கிற்கு ஓலா நிறுவனத்திடம் இருந்து சுமார் 18 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவரது அறையை சோதனை செய்தபோது 28 பக்க தற்கொலை குறிப்பை கண்டறிந்தனர். அதில், தனது தற்கொலைக்கு சிஇஓ பவிஷ் அகர்வால் மற்றும் உயர் அதிகாரி சுப்ரதா குமார் ஆகியோர்தான் காரணம் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த கடிதத்தின் அடிப்படையில் அரவிந்தின் சகோதரர் பெங்களூர் காவல் துறையில் புகார் அளித்தார்.அதன்பேரில், ஓலா நிறுவன சிஇஓ பவிஷ் அகர்வால் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மூத்த அதிகாரி சுப்ரதா குமார் மற்றும் ஓலா நிறுவனம் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
October 21, 2025 7:37 AM IST