வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் எழுச்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், இந்தியாவுக்கு எதிரான தீவிர நிலைப்பாடுகளால் சர்ச்சைக்குரிய நபராக அறியப்பட்டவருமான ஷெரீஃப் உஸ்மான் ஹாடி, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் உயிரிழந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து, டாக்கா உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் வங்கதேசத்தை உலுக்கிய மாணவர் எழுச்சியின் முன்னணித் தலைவராக இருந்த ஹாடி, அந்த போராட்டங்களின் மூலம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுகால அடக்குமுறை ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 32 வயதான இந்த இளைஞர் தலைவர், இன்கிலாப் மஞ்சா அமைப்பின் செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்டதுடன், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகவும் களமிறங்கியிருந்தார்.
கடந்த வாரம் டாக்காவில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியபோது, முகமூடி அணிந்துவந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஹாடியை தலையில் சுட்டனர். டிசம்பர் 12 அன்று, டாக்காவின் பல்டன் பகுதியில் உள்ள கல்வெர்ட் சாலையில், மசூதிக்கு அருகே பேட்டரியில் இயங்கும் ஆட்டோ ரிக்ஷாவில் பயணம் செய்துகொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்ததாக காவல்துறை தெரிவித்தது.
இதில், கடுமையாக காயமடைந்த ஹாடி முதலில் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், பின்னர் எவர்கேர் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, மேம்பட்ட சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அவரை சிங்கப்பூருக்கு அனுப்பியது.
கடந்த ஆறு நாட்களாக உயிருக்குப் போராடி வந்த அவர், டிசம்பர் 18, 2025 அன்று பலியானதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது. “SGH மற்றும் தேசிய நரம்பியல் நிறுவன மருத்துவர்களின் கடும் முயற்சிகளுக்குப் பிறகும், ஹாடியை காப்பாற்ற முடியவில்லை” என்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாடியின் உடலை டாக்காவுக்கு திருப்பி அனுப்புவதற்காக, சிங்கப்பூரில் உள்ள வங்கதேச உயர் ஆணையத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாடியின் மரணச் செய்தி வெளியானதும், டாக்காவிலும், வங்கதேசத்தின் பல பகுதிகளிலும் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கிப் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஹாடியை கொன்றவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து, வங்கதேச காவல்துறை, ஹாடி மீது தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் தீவிர வேட்டையைத் தொடங்கி இருக்கிறது. சந்தேகத்திற்கிடமான இரண்டு முக்கிய நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள காவல்துறை, அவர்களைப் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு 50 லட்சம் டாக்கா (சுமார் 42,000 அமெரிக்க டாலர்) வெகுமதியும் அறிவித்துள்ளது. “எல்லை பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன” என்று டாக்கா காவல்துறை செய்தித் தொடர்பாளர் முஹம்மது தலேபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
1994ஆம் ஆண்டு ஜலோகதி மாவட்டத்தின் நல்சிட்டி உபசிலாவில், ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த உஸ்மான் ஹாடி, இந்தியாவுக்கு எதிரான தீவிர நிலைப்பாடுகளால் அறியப்பட்டவர். பல அறிக்கைகளின்படி, இந்தியாவின் சில பகுதிகளை உள்ளடக்கியதாகக் கூறப்படும் ‘பெரு வங்கதேசம்’ என்ற சர்ச்சைக்குரிய வரைபடங்களை பரப்பியதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
அவர், மூத்த தலைவராக செயல்பட்ட இன்கிலாப் மஞ்சா அமைப்பு, ஒரு தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டதுடன், அவாமி லீக் அரசை அகற்றும் முயற்சிகளில் முன்னணியில் இருந்ததாக கூறப்படுகிறது. மாணவர் எழுச்சிக்குப் பிறகு, முகமது யூனுஸ் அரசாங்கம் அந்த அமைப்பைத் தடை செய்ததுடன், தேசியத் தேர்தலில் போட்டியிடவும் தடைவிதித்தது. இருப்பினும், ஹாடி டாக்கா-8 தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக பிரச்சாரம் செய்து வந்தார்.
ஹாடியின் மரணத்தைத் தொடர்ந்து, 85 வயதான அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இடைக்காலத் தலைவரான முகமது யூனுஸ், ஒரு நாள் தேசிய துக்க தினத்தை அறிவித்தார். அரசு, அரசு ஆதரவு, தனியார் கட்டிடங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள வங்கதேச தூதரகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், ஹாடியின் மனைவி மற்றும் ஒரே குழந்தையின் நலனுக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 19 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்குப் பிறகு, அவரது ஆத்மா சாந்தியடைய சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவம், பிப்ரவரி 12 அன்று நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, வங்கதேச அரசியல் சூழலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா – வங்கதேச உறவுகள், தீவிரவாதம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு போன்ற காரணிகளில், ஹாடியின் மரணம் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

