Last Updated:
இந்த சீசனின் தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூர் அணி, தற்போது தடுமாறி வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உள்ளூர் மைதானங்களில் நடைபெற்ற போட்டிகளில் அதிக முறை தோல்வி அடைந்த அணி என்ற மோசமான சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டெல்லியுடன் பகிர்ந்துள்ளது.
இந்த சீசனின் தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூர் அணி, தற்போது தடுமாறி வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் மோதின.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பௌலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் லிவிங்ஸ்டன் 54 ரன்களும், டிம் டேவிட் 32 ரன்களும் எடுத்தனர்.
குஜராத் தரப்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 170 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது பெங்களூரு மைதானத்தில் பெங்களூரு அணியின் 44-வது தோல்வி ஆகும்.
இதேபோன்று டெல்லியில் நடைபெற்ற போட்டிகளில் டெல்லி அணியும் 44 முறை தோல்வி அடைந்துள்ளது. தற்போது உள்ளூர் மைதானங்களில் நடந்த போட்டிகளில் அதிக முறை தோல்வி அடைந்த அணி என்ற மோசமான சாதனையை டெல்லி மற்றும் ஆர்சிபி அணிகள் பகிர்ந்து கொண்டுள்ளன.
April 03, 2025 11:03 PM IST