Last Updated:
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ (Marco Rubio) அக்டோபர் 17 முதல் 22 வரை இந்தியாவிற்கு வருகை தரவுள்ள நிலையில், ஜெய்சங்கரின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது
இந்திய-அமெரிக்க உறவு மற்றும் சுங்கவரி (Tariff) விவகாரங்களுக்குப் பின்னால் இருக்கும் உலகளாவிய மாற்றங்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறிய முக்கியக் கருத்துகள் தற்போது ஊடகங்களில் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.
உலக நாடுகளுடன் அமெரிக்கா கொண்டுள்ள தொடர்புகளும், அணுகுமுறையும் பெருமளவில் மாறிவரும் சூழலில், உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவுடனான தங்களின் உறவை மீண்டும் கணக்கிட்டு, மாற்றிமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு என்பது ஒரு ‘ராஜ ரீதியிலான பார்ட்னர்ஷிப் தானே தவிர, அது முறையான ‘இராணுவக் கூட்டணி’ (Formal Alliance) அல்ல என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ (Marco Rubio) அக்டோபர் 17 முதல் 22 வரை இந்தியாவிற்கு வருகை தரவுள்ள நிலையில், ஜெய்சங்கரின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், சுங்கவரி மற்றும் சில இருதரப்பு விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பொதுவான நலன் சார்ந்த துறைகளில் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகின்றன.
“கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் தங்களின் பொதுவான நலன்களைக் கண்டறிந்து, அதன் அடிப்படையில் கூட்டிணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த அடிப்படை அணுகுமுறையில் எவ்வித பெரிய மாற்றமும் ஏற்படவில்லை” என்று வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் குறிப்பிட்டுள்ளார். இராணுவக் கூட்டணி இல்லாததால், அமெரிக்காவுடன் இணைந்து செயல்படும் அதே வேளையில், தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கும் சுதந்திரம் இந்தியாவிற்கு இருப்பதாக அவர் விளக்கினார்.
அமெரிக்காவின் சுங்கவரி அணுகுமுறை மாற்றத்தைப் பற்றிப் பேசிய ஜெய்சங்கர், அமெரிக்கா தனது சொந்த நாட்டின் தொழிற்துறையை மீண்டும் வலுப்படுத்தவும், தனது நாட்டின் பொருளாதாரத்திற்குள் பிற நாடுகள் நுழையும் விதிகளை மாற்றியமைக்கவும் விரும்புகிறது என்றும், வர்த்தக வரிகள் உயர்வு என்பது இதன் ஒரு வெளிப்பாடுதான் என்றும் சுட்டிக்காட்டினார். இதனால், தனது நாட்டின் பொருளாதார நலன்களைப் பாதுகாத்துக் கொண்டே, அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை இந்தியா கொண்டு செல்ல வேண்டிய சவால் நிலவுகிறது.
மார்கோ ரூபியோவின் இந்திய வருகையின் போது ஆற்றல் துறை ஒத்துழைப்பு, இருதரப்பு உறவுகள் மற்றும் உலகளாவிய சூழல்கள் குறித்து மும்பை மற்றும் ஜாம்நகர் ஆகிய இடங்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
உலகளாவிய சூழலில் அமெரிக்கா தனது பங்கைத் தனியாக சுருக்கிக் கொண்டு, ஒரு ‘தனித்த வல்லரசாக’ மாறி வருகிறது என்றும், அதே நேரத்தில் சீனாவின் எழுச்சியும் உலக அரசியலை மாற்றி அமைத்து வருகிறது என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் முன்னதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


