Last Updated:
முன்னாள் உலக சாம்பியனான பி.வி. சிந்து, ஒலிம்பிக்கில் வெள்ளி மற்றும் வெண்கலம் என 2 பதக்கங்களை வென்ற ஒரே இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் விளையாட்டு வீரர்கள் கமிஷனின் தலைவராக அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பி.வி. சிந்து 2026 முதல் 2029 வரை நான்கு ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார். இதற்கு முன்னதாக 2017 முதல் இந்தக் கமிஷனில் உறுப்பினராக இருந்து வந்த அவர், தற்போது அதன் தலைவராக உயர்ந்துள்ளார். இவருடன் நெதர்லாந்தைச் சேர்ந்த டெபோரா ஜில்லே துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிந்து தலைமையிலான இந்தக் குழுவில் உலகின் முன்னணி வீராங்கனைகளான தென்கொரியாவின் ஆன் சே யங் இவர் தற்போதைய ஒலிம்பிக் சாம்பியன், சீனாவின் ஜியா யி ஃபான், எகிப்து நாட்டின் டோஹா ஹானி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
பி.வி. சிந்து இந்தக் கமிஷனின் தலைவராக இருப்பதால், அவர் BWF கவுன்சில் (BWF Council) உறுப்பினராகவும் செயல்படுவார். இதன் மூலம் உலக பேட்மிண்டன் அமைப்பின் முடிவெடுக்கும் அதிகாரத்தில் வீரர்களின் கருத்துகளை நேரடியாக முன்வைக்க முடியும்.
போட்டி விதிமுறைகள், வீரர்களின் நலன் மற்றும் விளையாட்டு நேர்மை தொடர்பான விஷயங்களில் நிர்வாகத்திற்கும் வீரர்களுக்கும் இடையே ஒரு பாலமாக இவர் செயல்படுவார்.


