Last Updated:
அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய உலக நாடுகளுக்கு மேலும் 10 சதவீதம் வரி விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகளவில் நாடுகளின் மீதான வரியை 10 சதவீதம் உயர்த்திய நிலையில் அதனை 15 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தை மீறி சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தை பயன்படுத்தி அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரிவிதிப்பை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், தனது வரி விதிப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உலக அரங்கில் தன்னை அவமானப்படுத்தியதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும் தனக்கு எதிராக தீர்ப்பளித்த 6 நீதிபதிகளை எண்ணி தான் வெட்கப்படுவதாகவும், 122வது சட்டப்பிரிவின் கீழ் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய உலக நாடுகளுக்கு மேலும் 10 சதவீதம் வரி விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் 10 சதவீதம் வரியை 15 சதவீதமாக உயர்த்துவதாகவும் வரி உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தான் எடுத்த முடிவு நன்கு ஆராய்ந்து எடுக்கப்பட்டதாகவும், அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக அந்நாட்டு உச்சநீதிமன்றம் வழங்கிய மோசமான தீர்ப்பை கவனத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.


