ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறாததால் டிக்கெட் வருவாயில் ரூ.38 கோடி நஷ்டத்தை போட்டி அமைப்பாளர்கள் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 11 முதல் 15-ம் தேதி வரை லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த தென் ஆப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி “கிரிக்கெட்டின் தாயகம்” என அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது இதுவே முதன்முறையாகும். இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதிபெற தவறியதால் போட்டி அமைப்பாளர்கள் சுமார் நான்கு மில்லியன் பவுண்டுகள் (ரூ.38 கோடி) வருவாயை இழக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய அணி எப்படியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும் இதனால் இந்திய ரசிகர்கள் மத்தியில் டிக்கெட்கள் வாங்குவதற்கு அதிக ஆர்வம் இருக்கும் என்ற எண்ணத்தில் போட்டி அமைப்பாளர்கள் முதலில் டிக்கெட்டுகளை பிரீமியம் விகிதத்தில் விலை நிர்ணயம் செய்திருந்தனர். ஆனால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாததால் மேரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) வருவாய் இழப்பை சந்திக்க உள்ளது. மைதானத்துக்கு அதிக ரசிகர்களை இழுக்கும் விதமாக டிக்கெட் விலையை வெகுவாக குறைத்துள்ளது.
டிக்கெட்டுகள் தற்போது 40 பவுண்டுகள் முதல் 90 பவுண்டுகள் வரை விற்கப்படுகின்றன. இது முதலில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட சுமார் 50 பவுண்டுகள் குறைவானவையாகும். விலை குறைப்புக்கு முன்னர் டிக்கெட் வாங்கிய எம்சிசி உறுப்பினர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.