
Last Updated:
உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து மேக்னஸ் கார்ல்சன் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து மேக்னஸ் கார்ல்சன் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். உலக ரேபிட் மற்றும் பில்ட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து நடப்பு சாம்பியன் கார்ல்சன் தகுதி நீக்கம் செய்யப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக ரேபிட் மற்றும் பிலிட்ஸ் செஸ் சாம்பியன் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், பல முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவரும், நடப்பு சாம்பியனுமான நார்வே நாட்டைச் சேர்ந்த கார்ல்சன் பங்கேற்றார். போட்டியின் இரண்டாம் நாளில் கார்ல்சன் ஜீன்ஸ் அணிந்து வந்தார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு விதிமுறைகள்படி வீரர்கள் போட்டியின் போது ஜீன்ஸ் அணிந்து வரக் கூடாது என்ற நிலையில், அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் 17 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் உடையை மாற்றி வரும்படி போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவுறுத்தினார். ஆனால், கார்ல்சன் இதனை ஏற்க மறுத்ததால் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பின் விதிகள் முட்டாள்தனமானது என்று கார்ல்சன் விமர்சித்துள்ளார். முன்னதாக இதே தொடரில் விளையாட்டு வீரர்களுக்கான ஷூ அணிந்து பங்கேற்ற ரஷ்ய வீரர் இயன் நெபோம்னியாச்சி (Ian Nepomniachtchi) போட்டி ஏற்பாட்டாளர்களின் அறிவுறுத்தலை ஏற்று தனது ஷூவை மாற்றினார். அதன்பின் அவர் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார்.
December 28, 2024 3:38 PM IST

