Last Updated:
ரஷ்யாவின் ராணுவச் செலவு 2024 ஆம் ஆண்டில் $149 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. இது 2023 ஆம் ஆண்டை விட 38 சதவீதம் அதிகமாகும்,
உலக அளவில் அதிகரிக்கும் போர் சூழல், மாறிவரும் புவியியல் அரசியல் ஆகியவற்றின் காரணமாக பல்வேறு நாடுகள் ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை கடுமையாக அதிகரித்துள்ளன.
உக்ரைன்- ரஷ்யா போர், காசா- இஸ்ரேல் போர், தென் கொரியாவுக்கு வடகொரிய மிரட்டல், தாய்வாணுக்கு சீனா மிரட்டல், இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் என உலகின் பல்வேறு பகுதிகளில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் ராணுவ ஒதுக்கீட்டிற்கான நிதியை அதிகரித்துள்ளன. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வில், 2023- ஆம் ஆண்டை விட 2024- ஆம் ஆண்டில், ஒட்டுமொத்தமாக ராணுவ நிதி 2 லட்சத்து 70 ஆயிரம் கோடி டாலராக அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இது 2023- ஆம் ஆண்டை 9 புள்ளி 4 சதவிகிதம் அதிகம்.
இரு பெரிய போர்களின் மையமாக உள்ள ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் ராணுவ நிதி ஒதுக்கீடு கணிசமாக அதிகரித்துள்ளது. மற்ற செலவினங்களை குறைத்து விட்டு, ராணுவப் பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை அளிப்பதால், சமூக முன்னேற்ற திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும் நேட்டோ கூட்டணிக்கான அமெரிக்காவின் நிலைப்பாடு ஆகியவற்றால் ரஷ்யா உள்பட பல ஐரோப்பிய நாடுகளின் ராணுவச் செலவு 17 சதவீதம் அதிகரித்துள்ளது. இது பனிப்போரின் முடிவில் பதிவு செய்யப்பட்ட அளவை விட அதிகம் என ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் ராணுவச் செலவு 2024 ஆம் ஆண்டில் $149 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. இது 2023 ஆம் ஆண்டை விட 38 சதவீதம் அதிகமாகும், ரஷ்யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.1 சதவிகிதம் ஆகும். உக்ரைனின் மொத்த ராணுவச் செலவு 2 புள்ளி 9 சதவீதம் அதிகரித்து 64.7 பில்லியன் டாலர்களை கடந்துள்ளது. இது ரஷ்யாவின் ராணுவச் செலவில் 43 சதவீதமாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 34 சதவீதத்துடன், மற்ற நாடுகளை விட மிகப்பெரிய ராணுவச் சுமையை உக்ரைன் சுமக்கிறது. மேலும் தற்போது, உக்ரைன் அனைத்து வரி வசூலையும் ராணுவத்திற்காக செலவிடுகிறது… இதனால் சில ஆண்டுகளில் அந்நாடு மிகப்பெரிய பொருளாதார சிக்கலை எதிர்கொள்ளும் என ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஜெர்மனியின் ராணுவ நிதி ஒதுக்கீடும் 28 சதவீதம் அதிகரித்து, 88.5 பில்லியன் டாலர்களை தொட்டுள்ளது. ஜெர்மனி, இந்தியாவை பின்னுக்கு தள்ளி உலகின் நான்காவது பெரிய ராணுவ நாடாக மாறியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளின் ராணுவ நிதி ஒதுக்கீடும் கடந்த ஆண்டை விட 15 சதவீதம் அதிகரித்துள்ளது. காசாவை தாக்கி வரும் இஸ்ரேலின் ராணுவ நிதியை 65 சதவீதம் அதிகரித்துள்ளது. எனினும், பிராந்திய பிரச்சனைகளில் சிக்கியுள்ள ஈரான், தனது ராணுவ நிதியை 10 சதவிகிதம் குறைத்துக்கொண்டுள்ளது. ஈரான் மீது பல்வேறு நாடுகளும் விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக அந்நாட்டு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அமெரிக்காவின் ராணுவச் செலவு 5.7 சதவீதம் அதிகரித்து 997 பில்லியன் டாலர்களை கடந்துள்ளது. இது 2024 இல் உலக ராணுவ நிதியில் 37 சதவீதம். அதிகரித்து வரும் சிக்கலான புவிசார் அரசியல் உலகில் தங்கள் அதிகாரத்தையும் செல்வாக்கையும் நிலைநாட்ட உலகெங்கிலும் உள்ள நாடுகள் தங்கள் ராணுவப் படைகளை பலப்படுத்தி வருகின்றன.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
April 29, 2025 1:16 PM IST
உலக அளவில் அச்சுறுத்தும் போர் சூழல்… ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்த 100+ நாடுகள்!


