Last Updated:
மேற்கு ஆசிய நெருக்கடி மற்றும் உலகளாவிய மோதல்களைத் தீர்ப்பதில் பிரதமர் நரேந்திர மோடியின் அணுகுமுறை மிகவும் சமநிலையானது.
உலக அரங்கில் சக்தி வாய்ந்த மற்றும் நடுநிலை நாடாக இந்தியா மாறி வருகிறது என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜெர்மனிக்கு மேற்கொண்டுள்ள பயணத்தின் போது, வளைகுடா பிராந்திய பதற்றம் மற்றும் இந்தியாவின் ராஜாதந்திர அணுகுமுறை குறித்து முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
பெர்லினில் உள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ராஜ்நாத் சிங் பேசியதாவது- உலகமே உற்று நோக்கும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நிலவும் பதற்றமான சூழலிலும் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஈரான் – அமெரிக்கா மோதல்களால் மற்ற நாட்டு கப்பல்கள் அந்தப் பகுதியை கடக்க சிரமப்பட்ட போது, இந்தியாவின் 7 முதல் 8 கப்பல்கள் எந்த இடையூறும் இன்றி பாதுகாப்பாக கடந்து வந்தன.
இது அமெரிக்காவுடனும், ஈரான் போன்ற நாடுகளுடனும் இந்தியா கொண்டுள்ள சமநிலையான ராஜாதந்திர உறவுக்குக் கிடைத்த வெற்றி. மேற்கு ஆசிய நெருக்கடி மற்றும் உலகளாவிய மோதல்களைத் தீர்ப்பதில் பிரதமர் நரேந்திர மோடியின் அணுகுமுறை மிகவும் சமநிலையானது.
ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருடன் பிரதமர் இது குறித்துப் பேசியுள்ளார். போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. உலக அமைதிக்காக இந்தியா முயற்சி செய்து வருகிறது.
எல்லாவற்றிற்கும் ஒரு காலம் உண்டு. நாளை உலக அமைதிக்கான முக்கியப் பங்கை இந்தியா வகிப்பதற்கான காலம் வரலாம். அந்த வாய்ப்பை நாம் நிராகரிக்க முடியாது. இந்தியா தற்போது உலக அரங்கில் ஒரு சக்திவாய்ந்த மற்றும் நடுநிலையான நாடாக வளர்ந்து வருவதையே இது காட்டுகிறது. என்று தெரிவித்தார்.
உலக அரங்கில் ஒரு சக்திவாய்ந்த நாடாக இந்தியா மாறி வருகிறது.. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்


