அண்டை நாடான மெக்சிகோவில் இருந்துதான் அமெரிக்காவிற்குள் போதைப் பொருள் நுழைவதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார். இதை கட்டுப்படுத்தவில்லை என்றால், மெக்சிகோ பெரும் பின் விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட மெக்சிகோ ராணுவம், தனது நாட்டில் அச்சுறுத்தலாக விளங்கிய போதைப்பொருள் கும்பல் தலைவனை சுட்டு வீழ்த்தியுள்ளது. நடந்தது என்ன?
மெக்சிகோவைச் சேர்ந்தவர் 59 வயதான நெமெசியோ ஓசெகுவேரா செர்வாண்டெஸ். இந்த பெயர் பலருக்கும் தெரியாது என்றபோதும், எல் மென்சோ என்றால் மெக்சிகோ மட்டும் இன்றி உலக நாடுகளே ஆடிப் போகும். எல் மென்சோ எனப்படும் செர்வாண்டஸ், ஜலிஸ்கோ நியூ ஜெனரேஷன் என்ற போதைப்பொருள் கும்பலின் தலைவனாக கோலோச்சியுள்ளார்.
அண்டை நாடான அமெரிக்கா மட்டுமின்றி மெக்சிகோவில் இருந்துதான், உலகின் பல்வேறு நாடுகளுக்கு கொக்கைன், அபின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. மெக்சிகோ அரசே, அச்சம் கொள்ளும் அளவிற்கு அந்நாட்டில் டிரக் மாஃபியாக்கள் கொடூரமானவர்களாக உலா வருகின்றனர்.
இதில், அமெரிக்கா போன்ற சர்வ பலம் பொருந்திய நாடே ஒருவரைக் கண்டு அஞ்சியது என்றால், அவர்தான் எல் மென்சோ. உள்ளூரில் போலீஸ் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரையும் தனது கையில் போட்டுக்கொண்டு போதைப்பொருள் பிசினஸில் கொடிகட்டி பறந்துள்ளார். இவரின் நெட்வொர்க் மெக்சிகோ முழுவதும் பரவிக் கிடந்ததால் அந்நாட்டு அரசால் போதைப் பொருள் கடத்தலை தடுக்க முடியாமல் தள்ளாடி வந்துள்ளது.
எல் மென்சோவின் ஆட்டம் ஓவரானதால், அவருக்கு முடிவு கட்ட அமெரிக்கா அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. தவறும்பட்சத்தில் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்க நேரிடும் என்று பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்தது. இதனிடையே, எல் மென்சோ குறித்து தகவல் தெரிவித்தால், இந்திய மதிப்பில் 136 கோடி ரூபாய் வழங்கப்படும் என அவரின் தலைக்கு பெரிய தொகையை நிர்ணயம் செய்தது. இது, அவர் எந்த அளவிற்கு ஆபத்தானவர் என்பதை பறைசாற்றுவதாக அமைந்தது.
இந்த நிலையில் மேற்கு மாகாணமான ஜலிஸ்கோவில் உள்ள டபல்பா பகுதியில் மெக்சிகோ ராணுவத்தினர் அதிரடி வேட்டையில் இறங்கினர். பல மாதங்களாக மாஸ்டர் பிளான் போட்ட ராணுவத்தினர் எல் மென்சோ மற்றும் அவரது கூட்டாளிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றிவளைத்தனர். ஆபத்தை உணர்ந்த போதைப்பொருள் கும்பல், ராணுவத்தை நோக்கி தாக்குதல் தொடுத்துள்ளது. உடனடியாக, சுதாரித்துக் கொண்ட ராணுவத்தினர் பதிலடி கொடுக்கும் வகையில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், எல் மென்சோ உட்பட போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த 6 பேர் குண்டடிபட்டு படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, படுகாயமடைந்தவர்களை மீட்ட ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே எல் மென்சோ உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது கூட்டாளிகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2015ஆம் ஆண்டு எல் மென்சோவை, மெக்சிகோ ராணுவம் சுற்றிவளைத்துள்ளது. அப்போது, போதைப்பொருள் கும்பல் லாஞ்சர் மூலம் ராணுவ ஹெலிகாப்டரையே சுட்டு வீழ்த்தியுள்ளனர். அதில் இருந்து ராணுவத்தினர் சுதாரிப்பதற்குள் எல் மென்சோ எஸ்கேப் ஆகியுள்ளார்.
இதையடுத்து, 2020-ல் போலீஸ் உயரதிகாரியையே டார்கெட் செய்து தாக்கியுள்ளனர். ஆயுதம் தாங்கிய வாகனங்கள், லாஞ்சர்கள் மற்றும் அதிநவீன ஆயுதங்கள் போதைப் பொருள் கும்பலிடம் இருந்ததால் அவர்கள் பெரும் அச்சுறுத்தலாக விளங்கியுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்க உளவுத்துறை பல மாதங்களாக வேவு பார்த்து எல் மென்சோவின் இருப்பிடத்தை கண்டுபிடித்துள்ளது.
பின்னர், அவர்கள் போட்டுக் கொடுத்த மாஸ்டர் பிளான் மூலம் மெக்சிகோ ராணுவத்தினர் ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்துள்ளனர். இருந்தபோதும், இந்த தேடுதல் வேட்டையில் அமெரிக்க ராணுவம் நேரடியாக ஈடுபடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல் மென்சோ தலைமையிலான போதை கும்பலைச் சேர்ந்தவர்கள் மெக்சிகோ முழுவதும் விஸ்தரித்துள்ளனர்.
ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் எல் மென்சோ சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கியுள்ளனர். வாகனங்கள், அரசு அலுவலகங்கள் மீது தீ வைத்து கொளுத்தியதால் பல்வேறு மாகாணங்கள் பற்றி எரிந்து வருகின்றன. இதனால், வருகிற ஜூன் மாதம் மெக்சிகோவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில்கொண்டு, அந்நாட்டு அரசு வன்முறையை கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
உலகையே மிரட்டிவந்த போதைப்பொருள் கும்பல் தலைவன் எல் மென்சோவின், ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தபோதும் அங்கு வெடித்துள்ள வன்முறை, மெக்சிகோ அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
