சென்னை: “உலக அளவில் அதிகம் நேசிக்கப்படும் கிரிக்கெட் வீரர் தோனி” என புகழாரம் சூட்டியுள்ளார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரஸல். நடப்பு ஐபிஎல் சீசனின் 22-வது லீக் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக தோனி, பேட் செய்ய களம் கண்டார். அப்போது சேப்பாக்கத்தில் போட்டியை பார்த்து ரசித்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடினர்.
ரசிகர்களின் ஆரவாரத்தை கேட்டு தனது காதுகளை கைகளால் மூடிக் கொண்டார் களத்தில் ஃபீல்டிங் பணியை கவனித்த ரஸல். அந்த அளவுக்கு அந்த சூழல் இருந்தது. ஒலி அளவை கணக்கிடும் மானியில் 125 டெசிபெல் என பதிவாகி இருந்தது. இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், இது குறித்து ரஸல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை போஸ்ட் செய்துள்ளார்.
“இந்த மனிதர் உலகில் மிகவும் நேசிக்கப்படும் கிரிக்கெட் வீரர் என்று நான் நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார். போட்டி முடிந்த பிறகு தோனியும், ரஸலும் சில நிமிடங்கள் புன்னகையுடன் பேசிக் கொண்டனர். அநேகமாக அவர் களத்துக்கு பேட் செய்ய வந்த போது கிடைத்த வரவேற்பு குறித்து இருக்க வாய்ப்புள்ளது.
நடப்பு சீசனில் மூன்று முறை பேட் செய்துள்ளார் தோனி. விசாகப்பட்டினத்தில் 16 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்த இரண்டு போட்டிகளில் தலா 1 ரன் எடுத்தார். விசாகப்பட்டினத்தில் 128 டெசிபெல் மற்றும் ஹைதராபாத் மைதானத்தில் 122 டெசிபெல் என அவர் பேட் செய்ய வந்திருந்த போது ரசிகர்கள் ஆரவாரம் செய்து அவரை வரவேற்றனர்.