கடந்த சில தினங்களுக்கு முன்னால் சீன தலைநகர் பெய்ஜிங்கில், உலகின் முதல் ரோபோக்கள் விற்பனையகமான “4 S’ என்கிற ரோபோ மால் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த மாலில் மனித உருவ ரோபோக்கள் உள்பட, தேநீர் தயாரிக்கிற, உணவு வழங்குகிற என நுகர்வோரின் தேவையறிந்து அவர்களுக்கு உதவி செய்கிற வகையில் பல ரோபோக்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நான்கு மாடி ரோபோ மால், 4,000 சதுர மீட்டருக்கு மேல், ஏழு முக்கிய பிரிவுகளைக் கொண்டுள்ளது. 40-க்கும் மேற்பட்ட உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தயாரித்த வீட்டு உதவியாளர் ரோபோக்கள், செல்லப்பிராணிகள், இயந்திரங்கள் இந்த ரோபோ மாலில் கிடைக்கும். பொருளாதார வளர்ச்சி குறைதல் மற்றும் வயதானவர்களின் மக்கள் தொகை அதிகரிப்பு போன்ற சவால்களை சமாளிக்க சீனா ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் அதிக முதலீடு செய்துள்ளது. தவிர, சீன அரசாங்கம் AI மற்றும் ரோபாட்டிக்ஸ் ஸ்டார்ட் அப்களுக்கு ஒரு டிரில்லியன் யுவான் நிதியை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

