Last Updated:
ஸ்பெயின் நாட்டின் காடலான் கலாசாரத்தின் அடையாளமாக விளங்கும் இந்த மனிதக் கோபுரத் திருவிழா, மனிதர்களின் அசாத்திய ஒற்றுமைக்கும் கூட்டு முயற்சிக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
ஸ்பெயினின் தாராகோனா நகரில், உலகின் மிகப்பெரிய மனிதக் கோபுரம் அமைக்கும் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. ஒருவர் தோள் மீது மற்றொருவர் ஏறி அமைக்கப்படும் காஸ்டெல்ஸ் என்ற மனித கோபுரங்கள், 2010-ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் பண்பாட்டுப் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்டன. அந்த வகையில், ஸ்பெயினின் தாராகோ அரங்கில் 30 ஆவது ஆண்டாக மனித கோபுரம் அமைப்பதற்கான போட்டிகள் நடைபெற்றன.
இதில் காடலோனியா பிராந்தியத்தைச் சேர்ந்த 12 முன்னணி அணியினர் பங்கேற்றனர். அணிகளின் உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து மனிதக் கோபுரங்களை அமைத்துத் தங்கள் கூட்டு உழைப்பை வெளிப்படுத்தினர். இந்த பாரம்பரிய போட்டியில் சிறுவர், சிறுமிகள் உச்சிக்குச் சென்று கோபுரத்தை முழுமைப்படுத்தினர். இந்தக் கலை வலிமையையும், தெளிவான மனநிலையையும் கற்றுத் தருவதாக போட்டியில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
Thousands of people packed the Tarraco Arena in the Spanish city of Tarragona for the world’s largest human tower competition, marking the 30th edition by showcasing 12 of Catalonia’s leading tower-building groups https://t.co/3xVu5rhO8m
— Reuters (@Reuters) October 5, 2026
இந்தப் போட்டியில், கோபுரத்தின் அடிப்பகுதி பலமான அடித்தளமாக (Pinya) செயல்பட, அதன் மேல் அடுக்கடுக்காக மனிதர்கள் ஏறி 10 அடுக்குகள் வரை பிரம்மாண்டமாக இந்த மனிதக் கோபுரங்களை உருவாக்கினர். விறுவிறுப்பான இந்தப் போட்டியில், பல நூறு பேரின் பலம், சமநிலை மற்றும் அசாத்திய துணிச்சல் காரணமாக உருவான இந்தக் கோபுரங்கள் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தன. கோபுரத்தின் உச்சிக்குச் செல்லும் சிறுவர்கள் எவ்வித அச்சமுமின்றி ஏறி, தங்களின் இலக்கை அடைந்ததும் கைகளை உயர்த்தி காஸ்டெல்ஸை முழுமைப்படுத்திய காட்சி அரங்கில் இருந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் பலத்த கைதட்டலையும் வரவேற்பையும் பெற்றது.
ஆபத்து நிறைந்த இப்போட்டியில், பாதுகாப்பு விதிகளின்படி உச்சியில் ஏறும் சிறுவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து பங்கேற்றனர். பலத்த போட்டிக்கு இடையே, மிகக் கடினமான மனிதக் கோபுர அமைப்பை வெற்றிகரமாக உருவாக்கி, அதிலிருந்து கீழே விழாமல் நேர்த்தியாகக் கலைத்த அணிக்கு அதிக புள்ளிகள் வழங்கப்பட்டு வெற்றியாளர் மகுடம் சூட்டப்பட்டது. ஸ்பெயின் நாட்டின் காடலான் கலாசாரத்தின் அடையாளமாக விளங்கும் இந்த மனிதக் கோபுரத் திருவிழா, மனிதர்களின் அசாத்திய ஒற்றுமைக்கும் கூட்டு முயற்சிக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

