வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, கடந்த 3-ம் தேதி அவரை அமெரிக்க அரசு சிறைப்பிடித்தது. அதைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகள் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக குரல்கொடுத்து வருகின்றன.
அமெரிக்காவிலிருந்தே அதிபர் ட்ரம்ப் நடவடிக்கைக்கு எதிராகப் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சீனா, அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது.
நேற்று பெய்ஜிங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, “எந்த நாடும் உலகின் காவலராகச் செயல்பட முடியாது. அதை நாங்கள் எப்போதும் நம்பியதுமில்லை. எந்த நாடும் தன்னை உலகின் நீதிபதி என்று கூறிக்கொள்வதையும் நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
அனைத்து நாடுகளின் இறையாண்மையும் பாதுகாப்பும் சர்வதேச சட்டத்தின் கீழ் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சமீப ஆண்டுகளாக பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் வெனிசுலா நாட்டுக்கான பொருளாதாரத் தடை உள்ளிட்ட பல தடைகளைத் தீவிரப்படுத்தின. அப்போது, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா, 2017-ம் ஆண்டிலிருந்து வெனிசுலாவிற்கு ஒரு பொருளாதார உயிர்நாடியாக இருந்து வருகிறது.

