சென்னை: 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை அதிகம் இறக்குமதி செய்த டாப் 10 உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் உக்ரைன் உள்ளது. இதை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) தரவுகள் உறுதி செய்துள்ளன.
ரஷ்யாவுடன் உக்ரைன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக யுத்தமிட்டு வருகிறது. அதனால் உலக அளவில் ஆயுதம் அதிகம் இறக்குமதி செய்யும் நாடாக உக்ரைன் உள்ளது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 2020-24 காலகட்டத்தில் அந்த தேசத்தின் ஆயுத இறக்குமதி சுமார் 100 மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த 2015 முதல் 2019 வரையிலான ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது வர்த்தக ரீதியாக 9.3 சதவீதம் வீழ்ச்சி இருந்தாலும் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ரஷ்யா (36%) மற்றும் பிரான்ஸ் (28%) ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா அதிகளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ளது.
கடந்த 1990-94 காலகட்டத்துக்கு பிறகு முதல் முறையாக சீன தேசம் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் டாப் 10 நாடுகளின் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. பாகிஸ்தானின் ஆயுத இறக்குமதி 2015-19 மற்றும் 2020-24 இடையிலான காலகட்டத்தில் சுமார் 61% அதிகரித்துள்ளது. சீனா தான் பாகிஸ்தானுக்கு அதிகளவில் (81%) ஆயுதங்களை விநியோகித்துள்ளது. ஆசியாவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
2020-24 காலகட்டத்தில் மட்டும் சுமார் 33 நாடுகளுக்கு ரஷ்யா ஆயுதங்களை விநியோகித்துள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்கு இந்தியா (38%), சீனா (17%) மற்றும் கஜகஸ்தான் (11%) ஆகிய மூன்று நாடுகளுக்கு சென்றுள்ளது. பிரான்ஸ் 64 நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளது. அதில் இந்தியாவுக்கு மட்டும் சுமார் 28 சதவீதம் ஏற்றுமதி ஆகியுள்ளது. ரஃபேல் போர் விமானங்களும் இதில் அடங்கும். உக்ரைனுக்கு மட்டும் சுமார் 35 நாடுகள் ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவன தரவுகள் தெரிவிக்கின்றன.