புதுடெல்லி: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்திய மகளிர் அணி முன்னேறியுள்ளது. இதையடுத்து இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இலங்கை, இந்தியாவில் நடைபெற்று வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 338 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து மகளிர் உலகக் கோப்பை போட்டியின் இறுதிப் போட்டிக்குள் 3-வது முறையாக நுழைந்துள்ளது இந்திய அணி.
இந்தப் போட்டியின்போது இந்திய அணி தரப்பில் மிகச்சிறப்பாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது 3-வது சதத்தை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்நிலையில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணியினர் பாராட்டு மழையில் நனைந்து வருகின்றனர்.
இந்திய மகளிர் அணிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சச்சின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது: இந்திய மகளிர் அணியினர் அற்புதமான வெற்றியைப் பெற்றுள்ளனர். முன்னணியில் இருந்து வழிநடத்தியதற்காக ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். சரணி, தீப்தி சர்மா ஆகியோர் ஆட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தனர். நமது மூவர்ணக் கொடியை உயரே பறக்க விடுங்கள். இவ்வாறு சச்சின் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது: ஆஸ்திரேலியா போன்ற வலிமையான எதிரணியை, எதிர்த்து இந்திய அணி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. ஒரு பெரிய ஆட்டத்தில் ஜெமிமா ரோட்ரிக்ஸின் சிறப்பான ஆட்டம், உண்மையான மன உறுதி, நம்பிக்கை மற்றும் ஆர்வத்தின் வெளிப்பாடு. இவ்வாறு விராட் கோலி தெரிவித்துள்ளார்.
மேலும், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், சமந்தா, கரீனா கபூர், ஆலியா பட், ராஷ்மிகா மந்தனா, நடிகர்கள் அனில்கபூர், மாதவன் உள்ளிட்டோரும் இந்திய மகளிர் அணியினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

