இராகவன் கருப்பையா –
மலேசிய கால்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்கு ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான ரிங்கிட் செலவு செய்யப்படுகிறது. ஆனால் அதன் மேம்பாட்டுத் தரம் கொஞ்சமும் திருப்தியளிக்கும் வகையில் இல்லாததால் உலகக் கிண்ணப் போட்டிகளில் கால் பதிப்பதற்கான காலம் எப்போது வரும் என கனவில் கூட காண முடியாத நிலையில் நாம் இருக்கிறோம்.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் நமக்குப் பின்னால் இருந்த நாடுகள் எல்லாம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கிண்ணப் போட்டிகளில் கோலோச்சுகின்றன. ஆனால் நமது நிலை என்ன?
கடந்த 1970ஆம் ஆண்டுகளில் தலைநகரில் ஆண்டுதோறும் நடைபெற்ற மெர்டேக்கா கிண்ணக் கால்பந்து போட்டிகளில் தென் கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் மொரோக்கோ போன்ற நாடுகளை மலேசியா தோற்கடித்த அந்த பொன்னான காலத்தை நிறைய பேர் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள்.
ஜெர்மனியில் 1972ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கும் பிறகு 8 ஆண்டுகள் கழித்து ரஷ்யாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போட்டிகளுக்கும் மலேசியா தேர்வு பெற்றதையும் நாம் இங்கு நினைவுகூரத்தான் வேண்டும்.
இப்படியெல்லாம் முன்னிலையில் இருந்த நாம் தற்போது உலகத் தர வரிசையில் 136ஆவது இடத்தில் பின்தங்கிக் கிடப்பது மிகவும் வேதனையான விஷயமாகும்.
தாய்லாந்து, இந்தோனேசியா, ஃபிலிப்பீன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகள் நமக்கு முன்னால் பீடுநடை போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் நாம் மட்டும் விடை தேட முடியாத அனைத்துலக அவமானம் ஒன்றை தலையில் சுமந்து நிற்கிறோம்.
ஏழு அயல் நாட்டு விளையாட்டாளர்களுக்கு கள்ளத்தனமாக பிறப்புப் பத்திரங்களையும் அடையாள அட்டைகளையும் தயார் செய்து, அவர்களை அதிகாரப்பூர்வமாக நம் தேசிய குழுவில் விளையாடச் செய்த மோசடியை இதர நாடுகளும் அனைத்துலக கால்பந்து சம்மேளனங்களும் கண்டுபிடித்துவிட்டன.
இதனால் சர்வதேச நிலையில் நமக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டுள்ள போதிலும், மலேசிய கால்பந்து சங்கமோ, விளையாட்டுத் துறை அமைச்சோ அதற்காக வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. ‘இடித்த புளியைப் போல்’தான் இருக்கிறார்கள்.
“அந்த சம்பவத்தை பழைய சரித்திரமாகக் கருதி அதனை மறந்துவிட்டு கடந்து செல்வோம்,” என சங்கம் அறிவித்ததை என்னவென்று சொல்வது? இதுதான் நம் நாட்டின் நிலை.
இதற்கிடையே நிர்வாகக் கோளாறுகளுக்கு இடமளிக்காமல் ஊழல்களைத் துறந்து, தங்களுடைய நாட்டின் மீதான பக்திக்கு முன்னுரிமை கொடுத்து, இன பாகுபாடின்றி, விளையாட்டின் மேம்பாடு மீது மட்டுமே கவனம் செலுத்தி இப்போது உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடும் நாடுகளில் சிலவற்றை இங்கு நாம் குறிப்பிடத்தான் வேண்டும்.
இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆகச் சிறிய நாடு, வெனசுவேலாவுக்கு அருகில் உள்ளதொரு குட்டித் தீவான ‘குராக்கோ’ எனப்படும் ஒரு கரீபிய தேசமாகும்.
வெறும் 158,000 பேரை மட்டுமே மக்கள் தொகையாகக் கொண்ட அந்த நாட்டின் மொத்த நிலப்பரப்பு 400 சதுர கிலோமீட்டர்தான். உலகக் கிண்ணப் போட்டிகளில் முதல் முறையாகப் பங்கேற்கும் அவர்கள் மிகவும் உற்சாகமான விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தி அனைத்துலக கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
முதல் தடவையாகக் கலந்து கொள்ளும் மற்றொரு நாடு, மேற்கு ஆஃப்ரிக்கத் தீவான ‘கேப் வெர்டே’. பெருநிலத்தில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்நாட்டின் மக்கள் தொகை வெறும் 530,000 பேர்தான்.
ஸ்பெயின் குழுவுக்கு எதிரான அந்நாட்டின் முதல் போட்டியில் மிகவும் அபாரமாக விளையாடிய அதன் கோல் காவலர் வோஸின்ஹோ, ஆட்டத்தின் முடிவில் கண்ணீர் வடித்தது மில்லியன் கணக்கானோரின் கவனத்தையும் நிலைகுலையச் செய்தது.
அந்த ஆட்டத்தைக் காண்பதற்கு தமது தாய் அமெரிக்காவுக்கு வர இயலாமல் போய்விட்டதே என்பதுதான் அந்த 40 வயது வீரரின் பெரும் கவலைக்கான காரணமாகும்.
‘கேப் வெர்டே’ நாட்டைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா செல்ல வேண்டுமானால் ‘விசா'(முன் அனுமதிச் சீட்டு) பெறுவதற்கு குறைந்த பட்சம் 62,000 ரிங்கிட் மதிப்புள்ள ஒப்பந்தப் பத்திரம்(Bond) வேண்டும்.
வறுமையின் காரணமாக வோஸின்ஹோவின் தாய் அதனை பெற இயலவில்லை. எனினும் அவ்விரு நாடுகளின் அரசியல் தலைவர்களின் பரிவு மிகுந்த தலையீட்டினால் அடுத்த ஆட்டத்தைக் காண அந்தத் தாய் அமெரிக்கா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 52 ஆண்டுகளுக்குப் பிறகு 2ஆவது தடவையாக இந்த போட்டிகளுக்கு தேர்வு பெற்றுள்ள ‘ஹைத்தி’ நாட்டின் நிலைமையும் சற்று பரிதாபம்தான். வட அமெரிக்காவின் மற்றொரு கரீபிய நாடான அந்த தேசத்தில் 60%க்கும் மேற்பட்டோர் வறுமையில் வாடுகின்றனர்.
லத்தீன் அமெரிக்க வட்டாரத்திலேயே இதுதான் மிகவும் ஏழ்மையான நாடு. அரசியல் நிலைத்தன்மை இல்லாமலும் உள்நாட்டுக் கலவரங்களினாலும், புயல் மற்றும் தொடரான நில நடுக்கங்கள் போன்ற பேரிடர்களினாலும் அந்நாடு பல்லாண்டுகளாக அவதியுறுகிறது.
இது போன்ற இன்னல்கள், சிக்கல்கள், துயரங்கள் எதுவுமே இல்லாமல் போதுமான வசதிகளுடன் இந்நாட்டில் நாம் வாழ்கிறோம். ஆனால் தவிர்க்கப்படக் கூடிய பலதரப்பட்ட கோளாறுகள் நமது விளையாட்டுத் துறையின் முன்னேற்றத்திற்கு தடங்களாக உள்ளன.
இதனிடையே இங்கிலாந்து மற்றும் ஃபிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் இன பாகுபாடின்றி விளையாட்டாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதையும் நாம் இங்கு சுட்டிக் காட்டத்தான் வேண்டும்.

ஃபிரான்ஸ் குழுவில் ஏறத்தாழ 90%க்கும் மேற்பட்டோர் ஆஃப்ரிக்க கண்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல இங்கிலாந்து குழுவில் பாதிக்கும் மேற்பட்டோர் கருப்பினத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதையும் நம்மால் காண முடிகிறது.
இன பாகுபாடுகளுக்கு இடமளிக்காமல் திறமைக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து விளையாட்டாளர்கள் தேர்வு செய்யப்படுவதால்தான் அந்நாடுகள் உலகத் தர வரிசையில் முன்னிலை வகிக்கின்றன என்பதையும் வெற்றிக் களிப்பில் உலகக் கிண்ணத்தை மார்பில் அணைக்கும் வாய்ப்பையும் பெறுகின்றன என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

