Last Updated:
டி20 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி 2026-ல் தொடங்க உள்ளது.
2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர்பான இந்தியா – வங்கதேசம் இடையிலான மோதல் போக்கு விவகாரம் தற்போது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி 2026-ல் தொடங்க உள்ளது. இதில் வங்கதேச அணி தனது லீக் போட்டிகளை கொல்கத்தா மற்றும் மும்பையில் விளையாட வேண்டும் என அட்டவணை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இந்தியாவில் தங்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, தங்கள் போட்டிகளை மட்டும் இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஐசிசி-க்கு கடிதம் எழுதியது.
இந்த நிலையில் தீவிர ஆலோசனைக்கு பின்னர் வங்கதேச வீரர்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறப்படுவதில் முகாந்தரம் இல்லை என்று ஐசிசி முடிவு எடுத்துள்ளது. எனவே, போட்டிகளை இடமாற்றம் செய்ய ஐசிசி மறுத்துவிட்டதுடன் போட்டி அட்டவணைப்படி இந்தியா வந்து விளையாடாவிட்டால், அந்தப் போட்டிகளில் வங்கதேசம் தோற்றதாகக் கருதப்பட்டு, புள்ளிகள் எதிரணிக்கு வழங்கப்படும் என எச்சரித்துள்ளது.
முன்னதாக வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட புகார்களை அடுத்து, பிசிசிஐ அறிவுறுத்தலின் பேரில் ஐபிஎல் அணியான கொல்கத்தா தனது வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை ஒப்பந்தத்திலிருந்து நீக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வங்கதேச அரசு தனது நாட்டில் ஐபிஎல் ஒளிபரப்பிற்குத் தடை விதித்தது.
ஒரு வீரருக்கே இந்தியாவில் பாதுகாப்பு இல்லை எனும்போது, ஒட்டுமொத்த அணியும் அங்கு செல்வது பாதுகாப்பானது அல்ல என வங்கதேச விளையாட்டு அமைச்சகம் கூறியது.
January 07, 2026 6:01 PM IST


