Last Updated:
3 போட்டிகளில் விளையாடி மொத்தம் 5 புள்ளிகளைப் பெற்ற ஜிம்பாப்வே அணி இன்று சூப்பர் 8 சுற்றினை உறுதி செய்துள்ளது
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வலுவான ஆஸ்திரேலியா அணி லீக் சுற்றிலேயே வெளியேறியுள்ளது. அந்த அணி இடம்பெற்றுள்ள பி பிரிவில் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்த தொடரில் இலங்கை, ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா, ஓமன் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் பி பிரிவில் இடம்பெற்றிருந்தன.
இதில் இலங்கை அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. ஜிம்பாப்வே 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகளையும், அயர்லாந்து அணி 1 பேட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 2 புள்ளிகளையும் பெற்றிருந்தது.
இந்நிலையில் இன்று இலங்கையின் பல்லிகெலே மைதானத்தில் நடைபெறவிருந்த அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக டாஸ் கூட சுண்டப்படாமல் நிறுத்தப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 3 போட்டிகளில் விளையாடி மொத்தம் 5 புள்ளிகளைப் பெற்ற ஜிம்பாப்வே அணி இன்று சூப்பர் 8 சுற்றினை உறுதி செய்துள்ளது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி இந்த உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.


