வாகன விபத்து, போர் போன்ற சூழ்நிலைகளில் மோசமான காயங்கள் ஏற்படும்போது, மருத்துவர்கள் உறுப்பு நீக்க சிகிச்சையைச் செய்வார்கள். இருப்பினும், இந்த சிகிச்சை முறையை மனிதர்கள் மட்டுமே செய்வதில்லை. சில எறும்புகளும் உறுப்பு நீக்க சிகிச்சைகளை மேற்கொள்வதாக புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.
உயிர்பிழைக்கும் சாத்தியத்தை மேம்படுத்த, காயமுற்ற எறும்புகளுக்கு மற்ற எறும்புகள் அவ்வாறு செய்கின்றன. இந்த சிகிச்சை முறை குறைந்தது 40 நிமிடங்கள் எடுக்கும். சில நேரங்களில், அவை மூன்று மணி நேரத்திற்கும் மேலாகும். ‘ஃபிளாரிடா கார்பென்டர்’ எறும்புவகைகள் இடையே இதனைக் காணமுடிந்தது. இந்த எறும்பு வகைகளை அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதிகளில் பார்க்கலாம்.
இந்த எறும்புகள் காயமடைந்த சக எறும்புகளின் உறுப்புகளை வாய்களின் மூலம் சுத்தம் செய்வதையும், சேதமுற்ற பகுதியைக் கடித்து, அதை நீக்குவதையும் காணமுடிந்தது. விலங்கு ஒன்று உயிரைக் காப்பாற்றும் நோக்கில் மற்றொரு விலங்குக்கு உறுப்பு நீக்க சிகிச்சையை எவ்வாறு மேற்கொள்கிறது என்பதை இந்த ஆய்வில் நாங்கள் முதன் முறையாக வருணித்துள்ளோம் என்றார் ஜெர்மனியில் உள்ள ‘வர்ஸ்பர்க்’ பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் நிபுணர் எரிக் ஃபிராங்க்.


