Last Updated:
பருவ காலத்தின் இயற்கை அழகு கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருந்தாலும், மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று முடங்கித்தான் போயுள்ளது
பனிப்பொழிவால் லடாக் மற்றும் மணாலி அழகுறக் காட்சியளிக்கிறது. காணும் இடம் எங்கும் நீக்கமற பனிக்கட்டிகள் நிறைந்து காணப்படும் லடாக் பகுதியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், இணையத்தில் அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்துள்ளது.
லடாக் பகுதியில் வெப்பநிலையானது -18 (minus18) டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைந்துள்ளது. இதனால் மலைகள், வீட்டின் மேற்கூரைகள், வாகனங்கள், சாலைகள் எனப் பல்வேறு இடங்களில் பனிக்கட்டிகள் படர்ந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்தும் பணிகளில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று, மணாலியில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரோதங் கணவாய் (Rohtang) பகுதியில் வெள்ளிக் கட்டிகளை உருக்கி ஊற்றியது போல பனி படர்ந்து காணப்படுகிறது.

பருவ காலத்தின் இயற்கை அழகு கண்ணுக்குக் குளிர்ச்சியாய் இருந்தாலும், மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று முடங்கித்தான் போயுள்ளது. அதேபோல இதுபோன்ற பருவகாலத்தில் இப்பகுதிகளுக்கு சுற்றுலாப்பயணிகளும் பாதுகாப்பு கருதி அனுமதிக்கப்படுவதில்லை.
வட இந்தியாவில் பல இடங்களிலும் கடும் பனிப்பொழிவு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் வெப்பநிலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் குளிர் அலைக்கான எச்சரிக்கை பல இடங்களில் விடப்பட்டு, சாலை போக்குவரத்துகள் முடக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும்கூட சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் வரும் 12ஆம் தேதி முதல் கடும் குளிர் நிலவ வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
December 08, 2025 5:13 PM IST


