சவுதியின் முக்கிய விமான நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றை குறி வைத்து ஹூதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்துகின்றனர். இருதரப்பும் மாறி மாறி தாக்கிகொள்வதில் அப்பாவி பொதுமக்கள் பலியாகின்றனர். ஹூதிகள், முதல் கட்டமாக நூற்றுக்கணக்கான டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்துகின்றனர்.
வான் பாதுகாப்பு அமைப்புகள் டிரோன்களை தடுத்து நிறுத்துவதற்குள் குரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு, அதேபகுதியில் தாக்குதல் நடத்துகின்றனர். இதனால், சவுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு அமைப்புகள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகின்றன. ஹூதிகளின் தாக்குதலை எதிர்கொள்ள சவுதி தற்போது பிரான்ஸ், பிரிட்டன், பாகிஸ்தான், எகிப்து நாடுகளிடமிருந்து வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க திட்டமிட்டு வருகிறது.
இந்த போர்ச் சூழலில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கான பாதுகாப்பு அதிரடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இளவரசர் MBS பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகள் குறைக்கப்பட்டுள்ளன. ஒரு வார காலமாக அவர் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. அவர் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ரகசிய பதுங்கு குழிகளுக்கும், பலத்த பாதுகாப்புடன் கூடிய அரண்மனைகளுக்கும் இடையே மாறி மாறித் தங்கிப் அரசுப் பணிகளைக் கவனித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சவுதி அரச குடும்பத்திற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது Royal Guard பாதுகாப்பு படைப்பிரிவு. சவுதி மன்னர் மற்றும் இளவரசர் MBS ஆகியோருக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பாதுகாப்பை வழங்குவது Royal Guard-டின் முதன்மையான பணியாகும்.
சவுதி இளவரசர்
தலைநகர் ரியாத் மற்றும் பிற முக்கிய நகரங்களில் உள்ள அரச குடும்பத்தினரின் அரண்மனைகள், பதுங்கு குழிகள் மற்றும் மிக முக்கியமான அரசுத் தளங்களின் பாதுகாப்பை இவர்கள் கவனித்துக் கொள்வார்கள். சவுதியின் பிற ராணுவப் பிரிவுகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டாலும், Royal Guard மன்னரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது. Royal Guard வீரர்கள் கடுமையான விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு, அதிநவீன தற்காப்புப் பயிற்சிகளுக்குப் பின்னர் தான் தேர்வு செய்யப்படுவார்கள். அரச குடும்பத்தின் பாதுகாப்புக்காக எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளவும், தேவைப்பட்டால் தங்கள் உயிரைத் தியாகம் செய்யவும் இவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நவீன கால தொழில்நுட்பமான வான் பாதுகாப்பு மற்றும் மின்னணுப் பாதுகாப்பு அமைப்புகளையும் இவர்கள் கையாளுவதில் கைதேர்ந்தவர்கள்.
மன்னர் அல்லது பட்டத்து இளவரசர் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும்போதோ அல்லது உள்நாட்டில் முக்கியப் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போதோ, Royal Guard வீரர்கள் பாரம்பரிய ஆடைகளை அணிந்து அரணாகப் பின்தொடர்வது தனித்துவமான அடையாளம். இந்த வீரர்களின் விவரங்கள் மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள் மிகவும் ரகசியமாகப் வைக்கப்படும். சவுதி மன்னர் மற்றும் பட்டத்து இளவரசரின் ஒவ்வொரு பயணத்தின் போதும் அவர்களின் பாதுகாப்பு வியூகமும் மாற்றியமைக்கப்படும்.
தற்போது ஹூதிகள் இளவரசருக்கு நேரிடையாக சவால் விடுவதால் அவரது பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் அவர் பங்கர்களிலும் தங்க வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. சவுதி அரச குடும்பத்தினருக்கென உருவாக்கப்பட்டுள்ள பிரதான பதுங்கு குழிகள் நிலத்தடியில் பல நூறு அடிகள் ஆழத்தில் கட்டப்பட்டவை. இவை பாலிஸ்டிக் ஏவுகணைகள், அதிநவீன குரூஸ் ஏவுகணைகள் மற்றும் அணுஆயுதத் தாக்குதல்களின் அதிர்வுகளைக் கூட தாங்கும் திறன் கொண்டவை.
பதுங்கு குழிகளுக்குள் பிரத்யேகமான ஆக்ஸிஜன் சுத்திகரிப்பு அமைப்புகள், மாதக்கணக்கில் தங்கியிருக்கக்கூடிய உணவு மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளன. இளவரசர் MBS ஒரே இடத்தில் தங்கியிருக்காமல், ரியாதில் உள்ள பலத்த பாதுகாப்பு கொண்ட வெவ்வேறு அரண்மனைகளுக்கு இடையே மாறி மாறி பயணிக்கிறார். சவுதி அரச குடும்பத்தின் முதன்மை நிர்வாக மையமான அல்-யமாமா அரண்மனையின் (Al-Yamamah Palace) கீழ் மிகப்பெரிய பாதுகாப்புப் பதுங்கு குழிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த பதுங்கு குழிகள் வெறும் தங்குமிடங்கள் மட்டுமல்ல. அங்கிருந்தபடியே சவுதி அரேபியாவின் முழு அரசாங்கத்தையும், ராணுவ அமைப்புகளையும் இயக்கும் வகையில் அதிநவீன செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சாதனங்கள், ரேடார் கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் நேரலை கண்காணிப்பு திரைகள் அமைக்கப்பட்ட நிலத்தடி கட்டுப்பாட்டு மையங்களாக செயல்படுகின்றன. தற்போது ஹூதிகள் நடத்தும் கடுமையான தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என சவுதி குற்றம்சாட்டுகிறது.

சவுதி அரேபியா, ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஈரான் ஆகிய மூன்றும் இணைந்த இந்த முக்கோணப் பகை என்பது மத்திய கிழக்கு ஆசியாவின் புவிசார் அரசியலில் மிக முக்கியமான மோதல் களமாகும். சவுதி அரேபியா, இஸ்லாத்தின் சன்னி பிரிவின் தலைமை நாடாகவும், மதம் சார்ந்த புனிதத் தலங்களைக் கொண்ட நாடாகவும் தன்னை முன்னிறுத்தி கொள்கிறது. ஈரான், ஷியா (Shia) இஸ்லாமியப் பெரும்பான்மை கொண்ட நாடாகவும், உலகளாவிய ஷியா இயக்கங்களின் தலைமை நாடாகவும் செயல்படுகிறது. ஹூதிகள், ஏமனின் வட பகுதியில் உள்ள ஷியா பிரிவின் ஒரு கிளைப் பிரிவான ‘ஜைதி’ (Zaydi) இஸ்லாமியர்கள்.
இவர்களுக்கும் ஈரானுக்கும் இடையே உள்ள மத மற்றும் சித்தாந்த உறவு சவுதி அரேபியாவுக்கு, அதன் தெற்கு எல்லையில் எப்போதும் அச்சுறுத்தலாகவே இருக்கிறது. ஈரான் சவுதி அரேபியாவுடன் நேரடியாக மோதாமல், ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு நவீன ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி தனது பகையை தீர்த்துக்கொள்கிறது. ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சிக்கு பின்னர்தான் சவுதிக்கும் ஈரானுக்கு பகை ஏற்பட்டது. அதற்கு முன்பு வரை இரு நாடுகளும் அமெரிக்காவுடன் நட்பு பாராட்டும் மன்னர்களின் ஆட்சிக்கு கீழ் இருந்தன.
1979- ஆம் ஆண்டு ஈரான் புரட்சிக்கு பின்னர் மன்னர் ஆட்சிக்கு எதிராக ஈரான் கருத்துக்களை கூற தொடங்கியது. 1980-ல் ஈராக் அதிபர் சதாம் உசேன் ஈரான் மீது போர் தொடுத்தபோது, சவுதி அரேபியா ஈரானை வீழ்த்துவதற்காகப் பில்லியன் கணக்கில் பண உதவி மற்றும் ராணுவ ஆதரவை சதாம் உசேனுக்கு வழங்கியது.
இதனால் கோபமடைந்த ஈரான், சவுதியைத் தனது முதன்மை எதிரியாகப் பார்க்கத் தொடங்கியது. 2014- ஆம் ஆண்டில் ஹூதிகள் ஏமனின் தலைநகர் சனாவைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தபோது, சவுதி அரேபியா அரபு நாடுகளுடன் இணைந்து ஏமனில் Operation Decisive Storm என்ற பெயரில் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. ஹூதிகள் மீதான சவுதியின் இந்த தாக்குதல், மறைமுகமாக இருந்த முக்கோணப் பகையை வெளிப்படையான போராக மாற்றியது.
அரேபிய தீபகற்பத்தில் சவுதி அரேபியாதான் பலம் வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் என்பது அதன் வெளியுறவுக் கொள்கை. ஆனால், ஈரானின் செல்வாக்கு ஏமனில் வளர்ந்து, பாப்-எல்-மந்தேப் (Bab el-Mandeb) போன்ற மிக முக்கியக் கடல்வழி வர்த்தகப் பாதையை ஹூதிகள் மூலமாகக் கட்டுப்படுத்த ஈரான் முயல்வது சவுதிக்கு மிகப்பெரிய ஆபத்து. அண்மைக் காலங்களில், சீனாவின் மத்தியஸ்தத்துடன் சவுதி அரேபியாவும் ஈரானும் தங்களது தூதரக உறவுகளை மீட்டெடுக்க ஒப்பந்தம் செய்துகொண்டன. ஆனாலும் ஈரான் ஹூதி இயக்கத்திற்கு ஆயுத மற்றும் அரசியல் ரீதியான உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.
ஹூதிகள் ஈரானின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு “பொம்மைப் படை” அல்ல. அவர்களுக்கு என பிரத்யேகமான உள்நாட்டு அரசியல் நோக்கங்களும், ஏமனின் அதிகாரத்தைக் முழுமையாகக் கைப்பற்றும் இலக்கும் உண்டு. எனவே, சவுதி-ஈரான் ஒப்பந்தம் என்பது இரு நாடுகளுக்கு இடையேயான அரசு மட்டத்திலான சமாதானமே தவிர, அது ஏமனில் ஹூதிகளின் போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவராது.
ஏமனில் சவுதி ஆதரவு பெற்ற அரசாங்கத்திற்கும் ஹூதிகளுக்கும் இடையேயான உள்நாட்டுப் போர் இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. எண்ணெய் வளம் நிறைந்த பகுதிகள், துறைமுகங்களின் கட்டுப்பாடு மற்றும் அரசு ஊதியங்கள் போன்ற பல உள்நாட்டுப் பிரச்சினைகளில் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் எட்டப்படாத வரை ஹூதிகள் ஆயுதங்களைக் கீழே வைக்கத் தயாராக இல்லை. குறிப்பாக காசா போர் போன்ற மத்திய கிழக்கு பிராந்திய மோதல்களின் போது, தங்களை Axis of Resistance அமைப்பின் ஒரு பகுதியாக ஹூதிகள் காட்டிக் கொள்கின்றனர். இஸ்லாமிய உலகத்தில் தங்களது செல்வாக்கை உயர்த்திக் கொள்ளவும், செங்கடல் வழியாகச் செல்லும் இஸ்ரேல் மற்றும் மேற்கு நாடுகளின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் அரபு உலகில் தங்களுக்கு ஒரு தீவிரமான ஆதரவுத் தளத்தை உருவாக்கவும் அவர்கள் முயல்கின்றனர்.
சவுதி அரேபியாவுடன் நேரடியாக நடக்கும் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தங்களுக்குச் சாதகமான நிபந்தனைகளைப் பெறவும், ஏமன் மீதான பொருளாதாரத் தடைகளை முழுமையாக நீக்கச் செய்யவும் இந்தத் தாக்குதல்களை ஒரு Pressure tactic- ஆக ஹூதிகள் பயன்படுத்துகின்றனர். சுருக்கமாக சொன்னால், சவுதி அரேபியா – ஹூதி இடையேயான இந்த போர்ப் பதற்றமும், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் பாதுகாப்பு நடவடிக்கைகளும் வெறும் இரண்டு தரப்புகளுக்கு இடையிலான மோதல் மட்டுமல்ல.
இது தசாப்தங்களாகத் தொடரும் சவுதி – ஈரான் பிராந்திய ஆதிக்கப் போட்டியின் நேரடி வெளிப்பாடாகும். அதிநவீன Royal Guard படைப் பாதுகாப்பு, அணுஆயுதத் தாக்குதலையும் தாங்கும் ரகசிய நிலத்தடிப் பதுங்கு குழிகள் மற்றும் பன்னாட்டு வான் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை நாட்டின் தலைவர்களுக்கும் உள்கட்டமைப்புகளுக்கும் தற்காலிகப் பாதுகாப்பை வழங்கக்கூடும். இருப்பினும், ஏமனில் நிலவும் உள்நாட்டுப் பிணக்குகளுக்கு நிலையான அரசியல் தீர்வு காண்பதும், ‘செங்கடல்’ கடல்வழி வர்த்தகப் பாதையில் பாதுகாப்பை உறுதிசெய்வதும் மட்டுமே பிராந்தியத்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தும்.

