Last Updated:
மத்திய பிரதேசம் மாநிலம், நீமுச் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குளவிகளிடம் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற தன் உயிரைத் தியாகம் செய்துள்ளார் கஞ்சன் பாய் மேக்வால் எனும் பெண்.
மத்திய பிரதேசம் மாநிலம், நீமுச் மாவட்டத்தில் உள்ளது ரன்பூர் கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு அதே பகுதியில் அங்கன்வாடி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த அங்கன்வாடியின் ஊழியராக கஞ்சன் பாய் மேக்வால் (40) எனும் பெண் பணியாற்றிவந்தார்.
கடந்த 2ஆம் தேதி காலை வழக்கம்போல், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 20 குழந்தைகள் அங்கன்வாடிக்கு வந்துள்ளனர். பின்னர், பிற்பகல் சமயத்தில் குழந்தைகள் வழக்கமாக விளையாடும் இடத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென குழந்தைகளை நோக்கி ஏராளமான குளவிகள் வந்துள்ளன. அந்த சமயத்தில் குழந்தைகளுக்கு உணவு தயாரித்துக்கொண்டிருந்த கஞ்சன் பாய் மேக்வால் அதனைப் பார்த்து பதறியுள்ளார்.
உடனடியாக அவர் குழந்தைகளை குளவிகளிடம் இருந்து காப்பதற்காக அங்கிருந்த தார்பாலின், பாய்கள் ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் மீது போர்த்தியுள்ளார். மேலும், தன் உடலோடு குழந்தைகளை அணைத்தபடி அவர்களைப் பத்திரமாக அங்கன்வாடி அறைக்குள் அழைத்துச் சென்றார்.
இதற்குள் அந்தக் குளவிகள் கஞ்சன் பாய் மேக்வாலை மொத்தமாகத் தாக்கி கொட்டியுள்ளன. குழந்தைகளைப் பத்திரமாகக் காயமின்றி அங்கன்வாடிக்குள் விட்டு கஞ்சன் அப்படியே சரிந்து தரையில் விழுந்துள்ளார்.
அதற்குள் அங்கு நடந்த அசம்பாவித சத்தம் கேட்டு, அக்கிராமத்தினர் ஓடிவந்து தரையில் சாய்ந்த கஞ்சன் பாய் மேக்வாலை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் பரிதாபமாக பலியாகினார். 20 குழந்தைகளின் உயிரை தன்னலம் கருதாமல் தன் உயிரைத் தியாகம் செய்து காப்பாற்றியிருக்கிறார் கஞ்சன் பாய் மேக்வால்.
உயிரிழந்த கஞ்சன் பாய் மேக்வாலின் கணவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் என்றும், அவருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகனும் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், அந்தக் குடும்பத்தில் அவர் மட்டுமே வருமானம் ஈட்டிவந்தவர் என்றும் சொல்லப்படுகிறது.


